1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஏற்றுமதி அபிவிருத்திக்காக விதிக்கப்பட்ட செஸ் வரியால் கிடைக்கும் வருவாயை அந்தந்த தொழில்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

தேயிலைத் துறையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புக்கு இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்
1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கு அமைய ஒரு கிலோகிராம் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு 3 ரூபா அனுமதிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும், குறித்த அனுமதிக் கட்டணத்தை தேயிலை செய்கை மற்றும் தொழில்துறையின் அபிவிருத்தி, ஊக்குவிப்புக்குப் பயன்படுத்த இதன் மூலம் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தொகை இலங்கை தேயிலை சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூலதன நிதியத்தில் சேர்க்கப்படும். இதன் ஊடாக தேயிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் தேயிலை காணிகளின் வினைத்திறனை மேம்படுத்தவும், புதிய நடுகைகளை மேற்கொள்வதற்கும், மறுநடுகை செய்வதற்கும், கைவிடப்பட்ட தோட்டங்களில் செய்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கும், இதன் பலனாக தேயிலைத் துறையின் வினைத்திறனை அதிகரித்து, தயாரிப்பின் தரத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தேயிலை சபையின் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், ஏற்றுமதி பயிரான தேயிலை மீது விதிக்கப்பட்ட செஸ் வரியால் கிடைக்கும் வருமானம் குறித்த தொழில்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படவில்லையா என குழு கேள்வியெழுப்பியது. இருந்தபோதும், இந்தப் பணம் தமது சபையினால் பெற்றுக்கொள்ளப்படுவதில்லையென அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
ஏற்றுமதி அபிவிருத்திக்காக விதிக்கப்பட்ட செஸ் வரியால் கிடைக்கும் வருவாயை அந்தந்த தொழில்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அத்துடன், 1927ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நாணய மாற்றுண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காலாவதியான நிலையில் உள்ள சில பிரிவுகளை நீக்குதல் மற்றும் புதியவற்றை உள்ளடக்கும் நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கு அமைய குறித்த கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதன் ஊடாக மோசடியான மற்றும் பிழையான காசோலைகளை வழங்குபவர்கள் தொடர்பில் குற்றவியல் பொறுப்பைச் சுமத்த உதவும் என்பதுடன், அன்றாட வணிக நடவடிக்கைகளின் போது சட்டத்திற்கு அமைய நாணய மாற்றுச்சீட்டுக்களைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதுடன், காசோலைகளை மின்னணு முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.