தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம்.
சைக்கிள் ஓட்டம் என்பதே அருகிவரும் சூழலில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் வியப்பாகத்தான் பார்க்கப்படும்.

இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு, சிரேஷ்ட வெளிநாட்டுச்சேவை உத்தியோகத்தர் அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (19) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில், எனது முதல் நியமனம் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபராகக் கிடைத்தது. அன்று, குறிகாட்டுவான் வரையில் அளவெட்டியிலிருந்த எனது வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டியில்தான் செல்வேன்.
சில காலங்களில் கடுமையான காற்று வீசும். துவிச்சக்கரவண்டி நகராமல் நிற்கும் அளவுக்கு காற்று வீசும். இந்த வலிகளை எதிர்கொண்டமையால்தான் என்னவோ எமக்கு வலிமை கிடைத்தது. எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைத்தது. ஆனால் இன்றுள்ள இளம் தலைமுறையினருக்கு இவற்றைப்பற்றி தெரிந்திருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அரிது.
இப்போது ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் சில இடங்களில் பெற்றோர் குறிப்பாக தாய்மார் கூட்டமாக நிற்பார்கள். பிள்ளைகளை தனியார் கல்வி நிலையங்களில் விட்டுவிட்டு அவர்களுக்காக காத்திருப்பார்கள். பிள்ளைகளை நடந்து செல்வதற்குகூட அனுமதிப்பது குறைவாக உள்ளது.
சைக்கிள் ஓட்டம் என்பதே அருகிவரும் சூழலில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் வியப்பாகத்தான் பார்க்கப்படும். தனது தந்தையார் அகஸ்ரின் நினைவாக அவரது மகன் முன்னெடுக்கும் இத்தகைய போட்டிகள் எங்களுக்குத் தேவை. எங்கள் பிள்ளைகள் தங்களை வலிமையாக்கிக் கொள்ள சவால்களை எதிர்கொள்வதை தயார்படுத்திக்கொள்ள இவை அவசியம், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.