ஐ.நாவின் ஆலோசனைக் குழு தொடர்பான ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஜி.எல்.பீரிஸ்
திகதி: 22.07.2010 // தமிழீழம்
ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழு, போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா திரும்பியுள்ள ஐ.நாவின் இலங்கை வதிவிடப்பிரதிநிதி நீல் ப்ஹ_னே தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்காவின் திவயின சிங்கள நாளிதள் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினை விமல் வீரவன்ச தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழு முற்றுகையிட்ட போது பான்கி மூனின் உத்தரவின் பிரகாரம் ஐ.நா அலுவலகத்தினை தற்காலிகமாக மூடிவிட்டு அமெரிக்கா சென்ற நீல் ப்ஹ_னே நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா சென்றுள்ளார்.

நீல் ப்ஹ_னே ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிகை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஸ்ரீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஐ.நாவின் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சரிடம் நீல் ப்ஹ_னே சுட்டிக்காட்டியுள்ளதாக திவயினச் செய்தி கூறுகின்றது.

ஆனால், ஐ.நாவின் ஆலோசனைக் குழு தொடர்பான ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக அச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

மேலும், இலங்கையுடன் முன்னர் போன்று ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளதாகவும், உறுப்பு நாடு என்ற வகையில் ஸ்ரீலங்கா ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதாக நீல் ப்ஹ_னே தெரிவித்தாக திவயின தெரிவிக்கின்றது.