மோதலில் சிக்கிக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ருஹுனுப் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்ததாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.
ருஹுனுப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவனே உயிரிழந்துள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்ன கூறினார்.
புத்தளப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இந்த மாணவன், தாக்குதலுக்கு இலக்காகி கடுங் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாணவனின் மரணத்தைக் கண்டிக்கும் வகையில் மாத்தறை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாணவன் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக இரகசியப் பொலிசைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தென்மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ரணவக்க இதுபற்றிக் கூறுகையில் பதுளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு இரகசிய பொலிஸ் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாத்தறைப் பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் நேற்று அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலம் தொடர்பாகப் பொலிசார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.