பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் தமிழினத்தின் விடுதலைக்கு ஆதரவு
திகதி: 24.07.2010 // தமிழீழம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் ஆதரித்தும் சிறீலங்கா அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்யவேண்டும் எனக் கோரியும், ஐ.நா நிபுணர்குழுவை வரவேற்றும் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் முதற்தடவையாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

இலண்டன் றோஹம்டன் பல்கலைக் கழகத்தின் (Roehampton University), மனித உரிமைகள் பற்றிய குழுää மற்றும் இலண்டன் மெற்றோ பொலிற்ரன் பல்கலைக் கழக (London Metropolitan University) மாணவர் ஒன்றியம் ஆகியன விடுத்துள்ள பகிரங்க அறிக்கைகள் இத்தோடு இணைக்கப் பட்டுள்ளன.

சுமார் 34000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மெற்றோ பொலிற்ரன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 1983 ஜூலை கலவரத்தின் போது இலங்கையில் நடைபெற்றது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதைச் சுட்டிக்காட்டி அந்தக் காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 27 வருடங்கள் கடந்தும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளமை இங்கு முக்கியமானதென நாம் கருதுகின்றோம்.

சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவற்றின் ஆதரவை பெற்றதும் மனித உரிமை கற்கை நெறியினை பிரித்தானியாவில் கற்பிப்பதற்கு அரசின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரேயொரு பல்கலைக்கழகமாகவும் திகழும் இலண்டன் றோஹம்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் பற்றிய குழு தனது அறிக்கையில் இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைக்கும்ää சுயநிர்ணய உரிமைக்குமான ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தின் மீது தாம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலண்டன் றோஹம்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் குழு கருத்துச்சுதந்திரமற்ற சுழலில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளை பூகோள அரங்கில் எடுத்துச்செல்லக்கூடியதும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதுமான அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ள புலம்பெயர் தமிழர்களின் அணுகுமுறையைத் தாம் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகக் கூறியுள்ள இலண்டன் மெற்றோ பொலிற்ரின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான நிபுணர் குழுவை அமைத்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதோடு இந்த நிபுணர் குழு இலங்கைக்குப் போய்வருவதற்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதியை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளோடு ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இணைந்து செயற்படவேண்டும் என்றும் இந்த மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.