திகதி: 28.07.2010,
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியிலுள்ள பிரிட்டிஷ் பெற்றோலியம் நிறுவனத்தின் கடலில் இருந்து எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் 11பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், பாரிய இயந்திரமொன்று உடைந்து கடலுக்குள் விழுந்ததில் எண்ணெய் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு கடலில் எண்ணெய் கசிய ஆரம்பித்தது.
இதனையடுத்து, குறித்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை அடைக்கும் பணிகள் கடந்த 3 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, குறித்த எண்ணெய்க் கசிவு அடைக்கப்படும் வரையில் அந்த இடத்திலிருந்து இடைவிடாது எண்ணெய் கசிந்தவண்ணமுள்ளது. இதனால், கடலின் பல நூறு கி.மீ. பரப்பளவில் எண்ணெய்ப் படலம் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் மீன்பிடி, கடல் சார்ந்த பணிகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 17,000பேர் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
அந்தவகையில் லூசியானா, புளோரிடா, அலபாமா, மிஸிஸிபி, டெக்ஸாஸ் மாகாணங்களின் மீன்பிடித் தொழிலும் கடல் சார்ந்த சுற்றுலாப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் அகழ்வதற்கு 6 மாத கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
மேலும் இந்த எண்ணெய்க் கசிவு காரணமாக பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் ரீதியிலான பாதிப்புக்களும் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நட்டம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த எண்ணெய்க் கசிவு காரணமாக, மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழக்கின்றன. அத்துடன், மீ்ன்பிடிப் படகுகளும் சுற்றுலாப் படகுகளும், கப்பல்களும் இந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கடல் பிரதேசத்தினைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரித்தானிய பெற்றோலிய நிறுவனம் பல கோடிக்கணக்கில் செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.