சிறையில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரும் சீமான்

திகதி: 28.07.2010,

சிறையில் விதிமுறைகளை மீறி என்னை தனி அறையில் அடைத்து வைத்துள்ளதகவும் சிறை வளாகத்திற்குள் நடை பயிற்சி மேற்கொள்ளக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் முறையிட்டுள்ளார் .

இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

"முதல் வகுப்பு வசதி செய்யாமல் சாதாரண வகுப்பில் வைத்துள்ளனர். தனிமை சிறையை நீக்கி முதல்வகுப்பு தர உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோர் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மேலதிக குற்றவியல் சட்டத்தரணிஅசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறுகையில், தனிமை சிறையில் சீமானை அடைக்கவில்லை. அவருக்கு முதல் வகுப்பு வசதிகள் தரப்பட்டுள்ளதாக கூறினார்.

இதற்கு சீமான் தரப்பில் சட்டத்தரணி ராதாகிருஷ்ணன் பதில் மனுதாக்கல் செய்தார். அதில், சீமானுக்கு பக்கத்து அறையில் 15 கைதிகளை அடைத்து வைத்து விட்டு இவரை 50 பேர் அடைக்க கூடிய அறையில் தனியாக வைத்துள்ளனர்.

காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள இவருக்கு மட்டும் அனுமதி தருவதில்லை. நடைபயிற்சி மேற்கொள்ள அவருக்கு அனுமதி தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சிறைசூழலை பற்றி சீமான் எழுத்து பூர்வமாகவும், அரசு தரப்பில் பதில் மனுவாகவும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.