வன்னியில் சிறிலங்கா படையினர் அமைத்து வரும் நிரந்தரப் படைத்தளக் கட்டுமானப் பணிகளுக்கு உதவுவதற்கான சீன இராணுவ அதிகாரிகள் சிலரும் சிறிலங்கா வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
வன்னியில் சிறிலங்காப் படையினர் புதிய நிரந்தரப் படைத்தளங்களை அமைத்து வருகின்றனர். இதற்கு சீன அரசாங்கம் உதவிகளை வழங்கி வருகிறது.
சீனாவின் தொழில்நுட்ப உதவி மற்றும், நிதியுதவியுடனேயே இந்தத் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சீன உதவியுடன் இவ்வாறு அமைக்கப்பட்ட முதலாவது நிரந்தரப் படைத்தளம் கடந்த 22ம் திகதி சுதந்திரபுரத்தில் திறந்து வைக்கப்பட்டது. துணுக்காயில் மற்றொரு நிரந்தரப் படைத் தளக்கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சுதந்திரபுரத்தில் 68வது டிவிசன் தலைமையகத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இந்தப் படைத் தளக்கட்டுமானப் பணிகளுக்கு சீனாவின் உதவி கிடைத்திருப்பதற்கு வரவேற்புத் தெரிவித்திருந்தார். ஆனால் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிக்கும் அப்பால் சீனப் படை அதிகாரிகளின் நேரடிப் பங்களிப்பும் இந்த நிரந்தரப் படைத்தளக் கட்டுமானப் பணிகளுக்குப் பெறப்படுவது தெரிய வந்துள்ளது.
கடந்தவாரம் நிரந்தரப் படைதளக் கட்டுமானப் பணிகளை சிறிலங்காப் படையதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட படம் ஒன்று புதினப்பலகைக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மற்றும் வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ஆகியோருக்கு சீனப் படை அதிகாரி ஒருவர் வரைபடத்தை வைத்து விளக்கமளிப்பதைக் காணமுடிகிறது. சிறிலங்கா இராணுவம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்துள்ள இராணுவச் சீருடையில் காட்சியளிக்கும் இந்த சீனப் படையதிகாரி, தலையில் அணிந்துள்ளது சாதாரண தொப்பியாகும். படத்திலுள்ள ஏனைய சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் அனைவரும் தத்தமது படைப்பிரிவுக்குரிய அதிகாரப்பூர்வ தொப்பிகளை அணிந்துள்ள நிலையில், சீனப் படையதிகாரி சாதாரண தொப்பி அணிந்த நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. வன்னியில் சிறிலங்காப் படையினருக்கான நிரந்தரப் படைத்தளங்கள் அமைக்கும் நடவடிக்கையில் சீனப் படை அதிகாரிகள நேரடியான பங்களிப்பை வழங்குவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறுமனே ஆலோசனை வழங்கும் நடவடிக்கையா அல்லது அதற்கும் அப்பால் சீன மற்றும் சிறிலங்கா படைகள் வன்னியில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது