வன்னியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு - மீளக்குடியமர்ந்த மக்களை விரட்டுகிறது இராணுவம்
திகதி: 30.07.2010,
ஏ-9 நெடுஞ்சாலையை அண்டியுள்ள பிரதேசங்களில் இருந்து இராணுவத் தேவைக்காக சுமார் நாலாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் நிலங்கள் சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுது படிப்படியாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஏ-9 வீதியின் மருங்குகளில் இராணுவமுகாம்களை அமைக்கும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்தின் அடிப்படையில் முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து பொதுமக்களின் நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவருகிறது.

இதனால் போரின் காரணமாக இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்புவதி சிக்கல் நிலவுகிறது.

இராணுவத் தேவைக்காக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட நிலங்களின் சொந்தக்காரர்களை வேறு இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அரசின் இந்த அறிவிப்பு தான்தோன்றித்தனமானது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேற்றத்திற்காக வவுனியா, மாணிக்கம் பண்ணை இடம்பெயர்ந்தோர் நலன்புரிமுகாமிலிருந்து அழைத்து வரப்பட்டு சாந்தபுரம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனினும், இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

அத்துடன், இராணுவ தேவைக்காக ஆக்கிரமிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் ஏற்கனவே மீளக் குடியேறியுள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவம் அறிவித்துள்ளது.

இவ்வாறு, இராணுவத் தேவைக்காக பொதுமக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதில் பாரிய சிக்கல் நிலவுகிறது.

ஏ-9 வீதியின் கிழக்குப் பகுதியிலுள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களே இந்தச் சிக்கல்களினால் அவதிப்படுகின்றனர்.