Sanskathi

குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கே வெற்றி வாய்ப்பு: பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குதான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.பாட்னாவில் நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியின் (ஜனதா தர்பார்) இடையே  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது எனது கணிப்பாகும். தங்களது மண்ணில் இருந்து நாட்டின் பிரதமராகியிருக்கும் நபரின் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்களா? அப்படி ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மிகவும் தீவிரம் காட்டி வருவதாக கூறுகிறீர்கள். அவரது செயல்பாடுகளை நீண்டகாலமாக நான் அறிவேன். இந்நிலையில், அவரின் நடவடிக்கையில் புதிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்த போதிலும், அயோத்தி விவகாரம், பொது சிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ஆகிய விவகாரங்களில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பசுப் பாதுகாவலர்களின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவரும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்” இவ்வாறு  நிதீஷ் குமார் கூறினார்

பீகாரில்  மாநிலத்தில் பாஜகவுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடியும் உள்ளனர். எனினும், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடவில்லை. அத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தனித்தே போட்டியிடுகிறது