Sanskathi
Nov 20

ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலிய நாம் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டியதும் அவசியமாகும்;கெங்காதரன்

ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலிய நாம் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டியதும் அவசியமாகும்;கெங்காதரன்

இதுவரை எமது நாட்டை ஆண்ட ஜனாதிபதிகளில் எமது இனத்திற்கு குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற உத்வேகத்துடனும் உள தூய்மையுடனும் செயற்படும் ஒரே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன என்பதே உண்மையாகும்.ஊழலற்ற தூய்மையான ஏழைகள் மீது பரிவும் அக்கறையும் கொண்டதான ஆட்சியை மேற்கொண்டிருக்கும் அவரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது தமிழ் மக்களின் கடமையாக இருக்கின்றது.

மேற்கண்டவாறு பெரியகல்லாறு இந்த கலாசார மண்டபத்தில் ஞாயிறு ((19) மாலை நடைபெற்ற விளையாட்டுக் கழகங்களின் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரி.கெங்காதரன் தெரிவித்தார் .

அவர் தொடர்ந்து பேசுகையில் நாம் இன ஒற்றுமை பற்றி பேசுவதற்க முன் எமது சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும். எமக்குள் பிளவுகள் இருக்கக் கூடாது அனைவரும் ஒற்றுமையடன் எமது அபிவிருத்திக்காக பாடு பட வேண்டும்.

ஜனாதிபதி எனக்கு மிகுந்த நம்பிக்கையுடன் அமைப்பாளர் பதவியை வழங்கியுள்ளார். இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். எனவே அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களனைவரினது ஒத்துழைப்பம் அவசியமாகும். அதற்கு கைமாறாக நாம் ஜனாதிபதிக்கு எமது அதரவை அளிக்க வேண்டும். அவர் காலத்தில்தான் எமக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் ஐக்கிய தேசிய கட்சியில் விஜயகலா மகேஸ்வரன் இருக்கின்றார் . ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கஜன் இருக்கின்றார். இவர்கள் அபிவிருத்தியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதே பாணியில் நானும் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் ஒத்த கருத்துடையவனாக இருக்கின்றேன்.

ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலிய நாம், அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டும். அதற்கு நாம் அரசுடன் நெருக்கமாகச் செயற்பட வேண்டும். எமது ஜனாதிபதி ஏற்கனவே இருந்த ஜனாதிபதிகள் போல் தமிழ் மக்களுக்கு எல்லாம் செய்வதாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்களே தவிர எதுவும் செய்யவில்லை. ஆனால் மைத்திரிபால சிறிசேன அவர்கள வடக்கு கிழக்கிற்கு நிறையவே செய்ய வேணடும் என்ற உண்மையான ஆர்வத்துடன் உந்துதலுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இது நல்ல சந்தர்ப்பம். நான் ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்புகளை நேரடியாக செய்யக்கூடியதாக இருக்கின்றது. கிழக்குமாகாண ஆளுனர் மற்றும் மத்திய அரசின் அமைச்சர்களுடன் நேரடி தொடர்புகளை பேணி வருகின்றேன் அனைவருமே எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். 

நானும் அடிப்படையில் தமிழ் உணர்வாளனாகவே இருக்கின்றேன். எனக்கு எந்த தமிழ் கட்சிகளுடனும் முரண்பாடில்லை. ஆனால் எமது பிரதேசங்களில் பல மக்கள் பட்டினியின் பிடியில் இருக்கின்றார்கள். ஒரு இடமாற்றம் பெறுவதாக இருந்தால் கூட யாரை அணுகினால் சரிவரும் என்ற குழப்ப நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தெருவில் நிற்கின்றார்கள் எனவே இத்தகைய எமது பிரதேச குறைபாடுகளைத் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடுடன்தான் இந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.

நான் தனித்து நின்று அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது. நான் அரசியலுக்குப் புதியவன். வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவன். எனவே உங்கள் அனைவரினதும் ஆலோசனைகளைப் பெற்று செயற்படுவதே எனது விருப்பம். எனவே இங்கு வருகை தந்துள்ள பத்து விளையாட்டுக் கழகங்களிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதி மூலம் உள்வாங்கி ஒரு அபிவிருத்திக் குழு அமைத்து அதன் மூலம் ஆலோசனைகளையும் தீர்மானங்களையும் பெற்று செயற்படுவதே எனது நோக்கம்.

நாம் எதிர்வரும் பிரதேச சபை தேர்தல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஜனாதிபதிக்கு எமது அதரவை வெளிப்படுத்த இதை நாம் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் எம்மீது ஜனாதிபதி அதிக அக்கறை எடுக்கக் கூடிய சூழுலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். எனவே இதற்கான தேர்தல் களத்தில் நிற்க விருப்பம் கொண்டவர்கள் என்னோடு நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் விருப்பைத் தெரிவிக்கலாம்.

இறுதி முடிவை தற்போது அமைக்கப்பட இருக்கும் குழுவே மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து குழு அமைக்கப்பட்டது. குழுவில் மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படடது.

கிராமத்தில் கல்விக்கும், எல்லைப் பிரச்சனைக்கும் முன்னுரிமை கொடுத்துச் செயற்படவேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதுவம் அமைப்பாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இக் கூட்டத்தில் சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜா, கல்லாறு விளையாட்டுக் கழக தலைவர் பெ.அகிலேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.