Sanskathi
Nov 29

சம்பந்தன் - சுமந்திரன் – மாவை, முக்கூட்டின் இரகசிய திட்டம் ?

சம்பந்தன் - சுமந்திரன் – மாவை, முக்கூட்டின் இரகசிய திட்டம் ?

                                                                                             அரிகரன்

இன்றைய நிலவரப்படி வரதராஜப் பெருமாளின் தலைமையில் இயங்கிவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா (தற்போது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வரவுள்ளது. இது தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன. இறுதி முடிவெடுக்கும் போச்சுவார்த்தைகள் இவ்வாரம் கொழும்பில் இடம்பெறவுள்ளன. வடக்கு கிழக்கு மாகாண முன்னைநாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள், நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருந்துவிட்டு கடந்த வருடம் சிறிலங்கா திரும்பி, மீளவும் தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்.

இதன் ஆரம்பக் கட்டமாக அதுவரை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா என்னும் பெயரில் இயங்கிவந்த தனது கட்சியை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்று பெயர் மாற்றினார். இந்த பெயர் மாற்றத்தின் நோக்கம் என்ன என்னும் கேள்விக்கான பதில் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கூட்டமைப்புக்குள் நுழையும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் பெயர் மாற்றம் இடம்பெற்றிருந்தது. எனினும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரதர் அணியை உள்வாங்குவதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் வரதரின் முயற்சி தாமதமானது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடுகள் தீவிரமடைந்தன. சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் சம்பந்தன் - சுமந்திரன் - மாவை முக்கூட்டிற்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றிப் பழுத்தது. இதனால் சுரேஸ் தமிழரசு கட்சியின் சின்னத்தில் இனி தனது கட்சி போட்டியிடாது என்னும் முடிவை அறிவித்தார். இதனை தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட சுமந்திரன் தனது இரகசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் கடந்த காலத்தில் முரண்பட்டவர்கள் பலர் பிற்காலங்களில் தேசியத் தலைமையை ஏற்றுக் கொண்டு உடன்பட்டுச் சென்றிருக்கின்றனர். ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த பாலகுமாரன் தனது அமைப்பை கலைத்துவிட்டு, எமது அமைப்புடன் இணைந்து கொண்டார். அதே போன்று ஏட்டிக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்த தமிழரசு கட்சி உள்ளடங்கலாக டெலோ, சுரேஸ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், ஆகியனவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலுடன் இணைந்து கொண்டன. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தேர்தல் கூட்டை விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கியது.

ஆனால் 2009இற்கு பின்னர் கூட்டமைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரமுடையவராக காணப்பட்ட சம்பந்தன் உடனடியாகவே விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போன்றதொரு தோற்றத்தையே காண்பித்துக் கொண்டார். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த அனைவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றினார். சம்பந்தனிடம் ஒரு தெளிவான திட்டம் இருந்தது அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை முற்றிலுமாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்வதுதான் அது. அதனை அவர் மிகவும் குயுக்தியுடன் செய்து வந்தார். கூட்டமைப்புக்குள் சம்பந்தனின் நிகழ்ச்சிநிரலை கேள்வி கேட்கும் அனைவரையும் கூட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டே குரலற்றவர்களாக்கினார். தனது திட்டத்தை கச்சிதமாக முன்னெடுக்கக் கூடிய ஒருவரை கூட்டமைப்புக்குள் கொண்டு வந்தார். சுமந்திரன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒருவர். ரணிலின் முகவர். ஆரம்பத்தில் இது தொடர்பில் பலரிடமும் சந்தேகம் மட்டும்தான் இருந்தது ஆனால் அது தற்போது உறுதியாகியுள்ளது. இன்று சுமந்திரன், அரசாங்க பிரதிநிதிகளுடன் இணைந்தே ராஜதந்திரிகளை சந்திக்கின்றார். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றார். அரசாங்க பிரதிநிதிகளின் அங்கமாகச் செல்லும் ஒருவர் எவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகள் சார்பில் அரசாங்கத்தை எதிர்த்துப் பேச முடியும்

தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்கும் இரகசிய திட்டமொன்றுடன் கூட்டமைப்புக்குள் வந்த சுமந்திரன், சம்பந்தனின் ஆசீர்வாதத்துடன் கூட்டமைப்பை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சுமந்திரனின் திட்டத்திற்கு இடைஞ்சலாக இருந்த ஒரேயொருவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டும்தான். தற்போது அவரும் வெளியில். இவ்வாறானதொரு சூழலில்தான், கூட்டமைப்பை முற்றிலுமாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கிலேயே வரதராஜப் பெருமாளை உள்வாங்கும் திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார். வரதர் உள்ளுக்குள் வந்தால் கூட்டமைப்பின் தேசிய முகம் மேலும் சிதைந்து இறுதியில் கூட்டமைப்பு என்பது முற்றிலும் இணக்க அரசியலுக்குரிய ஒரு கட்சியாக மாற்றமுறும். இதன் பின்னர் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெறுவதன் ஊடாக கூட்டமைப்பின் அடிப்படையையே மாற்றியமைப்பதுதான் அவர்களின் இரகசிய திட்டம். எப்பாடுபட்டேனும் தமிழ்த் தேசிய அரசியலை பூண்டோடு அழிக்க வேண்டுமென்பதுதான் சுமந்திரனின் திட்டம்.

தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளின் தியாகத்தை ஏலமிடும் கூட்டமைப்பின் அரசியல் வாதிகள், தேர்தல் முடிந்ததும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை மிகவும் பகிரங்கமாகவே முன்னெடுத்து வருகின்றனர். தங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்னும் இறுமாப்பில் திழைத்திருக்கும் சம்பந்தனும் சுமந்திரனும் தாங்கள் நினைத்தவாறு மக்களை ஆட்டி படைக்கலாம் என்றும் எண்ணுகின்றனர். இதனை எப்படி மாற்றியமைப்பது. இதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் என்ன செய்ய முடியும். இலங்கை தமிழரசு கட்சி பலமாக இருக்கும் வரையில் சம்பந்தன் - சுமந்திரன் - மாவை ஆகிய முக்கூட்டின் திட்டத்தை பலவீனப்படுத்த முடியாது. சுமந்திரன் - சம்பந்தன் கூட்டின் பலம் அவர்களது கட்சிக்கே மக்கள் ஆதரவு இருக்கின்றது என்னும் மமதை அந்த மமதையை உடைக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்த் தேசியத்தை இல்லாதொழிக்கும் அரசியலை இவர்கள் விரைந்து முடிப்பார்கள்.

சுமந்திரன் - சம்பந்தன் தரப்பு பலமாக இருந்தால், தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்கான வலுவான தளத்தை இல்லாமல்லாக்கும் அவர்களது பணியும் தடையின்றி தொடரும். அப்படி நடக்கும் போது, அரசியல் தீர்வு என்னும் பெயரில் அரைகுறையான ஏதோவொன்றை திணித்துவிடுவது மிகவும் இலகுவாக நடந்துவிடும். இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட அனைத்து சக்திகளும் ஓரணியில் நிற்க வேண்டும். இதனை புலம்பெயர் அமைப்புக்கள் ஊக்குவிக்க வேண்டும். புலம்பெயர் அமைப்புக்கள் தங்களின் நிதி பலத்தைக் கொண்டு தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியும். இது மிகவும் விரைவாகச் செய்யப்பட வேண்டிய ஒரு தமிழ்த் தேசியக் கடமையாகும். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் சம்பந்தன் - சுமந்திரன்- மாவை முக்கூட்டின் கரம் வலுவடைந்து கொண்டு செல்லும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாவீரர்களை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் தேசியத்திற்காக விதையானவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயல்களை தொடர்ந்தும் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் காலங்களில் மாவீரர்களின் தியாகங்கள் மீது பற்றுள்ளவர்கள் போல் பாசாங்கு செய்யும் கூட்டமைப்பின் அரசியல் வாதிகளின் முகத்திரை கிழிந்துவிட்டது. அதற்கு தற்போதைய கூட்டமைப்பின் நிலைமையே சிறந்த சான்று.

 

 

 

 

 

மாவீரர்கள்