Sanskathi
Feb 10

பிலிப்பைன்சுக்கு உலங்குவானூர்தி வழங்கும் கனடாவின் திட்டத்தில் சர்ச்சை

பிலிப்பைன்சுக்கு உலங்குவானூர்தி வழங்கும் கனடாவின் திட்டத்தில் சர்ச்சை

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான கனடாவின் 16 உலங்குவானூர்திகளை விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடா 16 உலங்குவானூர்திகளை பிலிப்பைன்சிற்கு விநியோகிக்க உள்ளதுடன், தேடிமீட்பு நடவடிக்கைகளுக்கும், அனர்த்த உதவித் திட்டங்களுக்கும் மட்டுமே அவை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்த உலங்குவானூர்திகள் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று, பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிக அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிவரும் நிலையில், பிலிப்பீன்ஸ் இராணுவத்தின் மூத்த அதிகாரியின் இந்த கருத்தை அடுத்து, இந்த உலங்குவானூர்தி விநியோகத் திட்டம் தொடர்பில் சர்ச்சைக்கள் எழுந்துள்ளன.

இதனை அடுத்து குறித்த இந்த மொன்றியல் தயாரிப்பு உலங்குவானூர்தி விநியோகத் திட்டத்தினை மீளாய்வு செய்யுமாறு கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிலிப்பைன்சில் இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கும், கொம்யூனிச கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக போரிட்டுவரும் அந்த நாட்டு இராணுவம், நீதிக்கு முரணான கொலைகளிலும், வேறு பல உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே கனடா பிலிப்பைன்சுக்கு 16 உலங்குவானூர்தி விநியோகிப்பதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆயுத வினியோகங்களை கனடா மேற்கொள்வது குறித்தும் முன்னதாக விமர்சனங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.