Sanskathi
Apr 02

சம்பந்தரின் கருத்தை மீறியா மாவை ஈ .பி .டி .பி யுடன் இணைந்தார் ?

சம்பந்தரின் கருத்தை மீறியா மாவை ஈ .பி .டி .பி யுடன் இணைந்தார் ?

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரின் அரசியலும், வாழ்வியலும் முள்ளில் விழுந்த சேலையாய் இருக்கும் தறுவாயில் மிக முக்கிய காலகட்டத்தில் பெரும் கிழிசலையும் கண்டிருக்கிறது என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளவும் ஜீரணிக்கவும் முடியாத ஒரு பெரும் விடயமாகி இருக்கின்றது .

புலிகளின் காலத்தில் பதுங்கி இருந்தவர்கள் எல்லாம் தற்போது மேம்பட்டு வந்து தங்கள் தலைகளைக்காட்டி புலிஎதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உள்ளூர் அதிகாரங்களை ஸ்திரப்படுத்தி கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்மைய உள்ளூராட்சி சபை தேர்தல் பெருமளவிலான தமிழர் கட்சிகள் பற்றியும், கட்சி சார்ந்த அரசியல் நிலைப்பாடு பற்றியும் கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது .

தமிழ் நலனே பிரதானம் எனக்கூவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தம் கொள்கைகள் என்ற வெறும் கருத்தையும் கூட்டமைப்பை எதிர்க்கும் தீவிரத்தையும் தவிர வேறு எதனையும் மிக தீவிரமாக செய்ததை காணமுடியவில்லை .

அவர்கள் தம் கருத்துக்களை மக்கள் முன் விதைப்பதற்கு பதிலாக திணிக்க முயல்கின்றமை பெரும் அரசியல் நெருக்கடிகளை மக்களுக்கே எற்ப்படுத்துகின்றது தமது கொள்கைகள் கோட்பாடுகள் பற்றி தாமே தெளிவான போக்கை கடைப்பிடிக்க முன்னணியினர் சிரமப்படுகின்றனர் அவர்களின் உள்வீட்டு அரசியல் நிலமைமிக அதிகப்படியான கதிரைப்போட்டி மனப்பான்மையிலும், தலைமை, போட்டி மனப்பான்மையிலும் அமிழ்ந்து இருப்பதால் அவர்களால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என நேரெதிராக தெளிவாக சொல்லும் திடமற்ற ஒரு கட்சியினராக உலவுகின்றனர் .

தனியே ஜெனிவா பேச்சும் கூட்டமைப்பை எதிர்ப்பதும், சாடுவதும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தெருவில் இருத்திவிட்டு கையெழுத்து வேட்டையில் இறங்கி பலவருடங்களாக அவர்களின் கண்ணீரில் அரசியல் செய்வதும், அரசியல் கைதிகளை விடுதலை செய் என கோசங்களை எழுப்புவதுமே இவர்களின் அரசியலாக இருக்கின்றது .

இதற்கும் அப்பால் கூட்டமைப்பினரின் வாக்கு வங்கியையும் அவர்களின் அரசியல் பலத்தையும் குறைத்து விட்டபின்னர் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் அணியிடம் என்ன பதில் இருக்கின்றது ?

இதுவரை காலமும் த.தே .கூட்டமைப்பு செய்யாத எந்தவிடயத்தை மக்கள் முன்னணி செய்யப்போகிறது ?

அப்படி அவர்கள் செய்ய விளையும் திட்டம் என்ன ?

அது எந்தளவுக்கு சாத்தியமானது ?

இவைகள் தொடர்பில் கஜேந்திரகுமார் அணியினர் மெளனமாக இருப்பதில் என்ன அர்த்தம் ?

வெறுமனே சுடலைகளை சுத்தம் செய்வதும், வீதியில் ஒட்டியிருக்கும் பிரசுரங்களை அகற்றுவதும், கையெழுத்து வாங்குவதும், இறப்பு வீடுகளுக்கு தோரணம் கட்டுவதும் இளைஞர் அணி என கூறுவதும் அரசியல் செயற்ப்பாடு அல்ல இத்தனை செயற்ப்பாடும் சாதாரணமாக சனசமூக நிலையங்களும், மாதர் அமைப்புக்களும் கூடி “ சகாய வேலை “என செய்துவிட்டு போகும் வேலைகளே .

ஆக ஒட்டு மொத்த அரசியல் நோக்கை இவர்கள் எவ்வகையில் அடைய முயற்ச்சிக்கின்றனர், போதிய அரசியல் அறிவுள்ள அங்கத்தவர்களைகூட கொண்டிராத இவர்கள் கட்சி மக்கள் எதிர்கால அரசியல் நிலைபற்றி தெளிவுபடுத்தாமல் இருப்பதன் நோக்கம் என்ன ?

தனியே ஆட்சிபீடம் ஏறினால் மட்டும் போதும் என நினைத்து மக்களை படுகுழியில் தள்ளிவிடாத அரசியல் நகர்வுகளை இவர்களால் முன்வைக்க முடியுமா ?

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்

காணிகளை விடுவித்தல்

காணமல்போன உறவுகளை கொண்டுவருதல்

இந்த மூன்று விடயங்களோடும் “தமிழரின் தாகம் “ தணிந்துவிடுமா ?

இதற்கும் அப்பால் சென்று தமிழரை நெறிப்படுத்தும் அரசியல் பார்வை, நீண்டகால அரசியல் நோக்கு எது முன்னணியால் முன்வைக்கப்பட்டது? சட்டம், ஒழுங்கு, சமூக அந்தஸ்த்து, கல்வி, பொருளாதாரம் அதிகார பகிர்வு, இவைதொடர்பில் முன்னணியினரின் பதிலும் செயற்பபாடுகளும் எதுவாக இருக்கின்றது ?

வெறுமனே கூட்டுச்சேரமாட்டோம் என கூறிக் கொள்வது மட்டும் அரசியலாகாது என்பதனை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள் அரசாங்கத்தில் இருக்கும் அத்தனை கட்சிகளும் எதோ ஒரு வகையில் இணைவை பேணியே தம் தமிழருக்கு எதிரான அரசியலை நகர்த்துகின்றன என்பதனை இவர்கள் அறியாதவர்களா?

தற்போதைய இணைவு அரசியல் உள்ளூராட்சி சபை நிலவரத்துக்கு நாம் இப்போது வருவோம் – நான் மேற்கூறிய விடயங்கள் அனைத்தும் இனி வரப்போகும் விடயத்துடன் தொடர்பு பட்டவையே தமிழரசுக்கட்சியின் இணைவு அரசியல் என்பது என்ன நோக்கிலான அரசியல் என மக்கள் உணர அதிக நேரம் எடுக்காது காரணம் கூடமைப்புக்கான முன்னகர்வால் அரசியல் ஆதரவுபோல் ஈ .பி. டி.பி க்குமான அரசியல் ஆதரவு என்பது நிலையானதாகவே இருக்கின்றது இங்கே முக்கிய விடயம் ஒன்றை நாம் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெருவாரியான வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்துக்கு தம் கட்சி சார்ந்த உறுப்பினர்களை அனுப்பும்போது ஈ .பி. டி.பி சார்பிலும் மக்கள் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவாகினர். ஆனால் அக்காலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னணி ஒரு கதிரையைகூட பெறுவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை இங்கே மக்கள் அங்கீகாரம் என்பது இணைந்து ஆட்சி அமைத்த இரு கட்சிகளுக்கும் உண்டு என்பதையும் மறந்துவிடமுடியாது .

தமிழரசுக் கட்சியினர் எனக்கு தலை போனாலும் பறவாயில்லை எதிரிக்கு மூக்கு போகவேண்டும் என்ற கணக்கில் சபைகளை கைப்பற்ற முயன்றமை வேடிக்கையும், போட்டியும் நிரந்த ஒரு தன்மைதான் இந்த தன்மையை தோற்றுவித்த பெருமை முன்னணியினரையே சாரும் 2010 ஆம் ஆண்டு கஜேந்திரகுமார் அணியினரை கூட்டமைப்பில் இருந்து விலக்கியமை முதல் இன்று வரைக்குமான அரசியல் பின்புலம் தமிழ் தேசியக்கூட்டமைப்புகும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் மாறாது ஒரே மாதிரியே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது அந்த மாறாத தன்மையே முன்னணியினரை பின்வாங்க செய்ய கூட்டமைப்பு எடுக்கும் அத்தனை பிரயத்தனங்களும் கூட்டுச்சேரல் வரை வந்து நிற்கின்றது .

கறந்தபால் முலையில் ஏறாது என்பதனை புரிந்துகொள்ளாத அரசியல்வாதியாக மாவை சேனாதிராஜா முழங்குவது மக்களையும் மக்களின் கருத்து தெளிவான தன்மையிலும் மண் அள்ளிப்போடும் ஒரு செயற்ப்பாடு என்பதனை தமிழரசுக்கட்சி தலைவர் புரிந்துகொள்ள வேண்டும், எதிரிக்கு கொம்பு சீவும் செயற்ப்பாட்டை கூட்டமைப்பு முன்னெடுப்பதாக மக்கள் நலன் சார்ந்தோர் விசனம் கொள்கின்றனர் .

கூட்டமைப்பினர் ஈ .பி .டி .பி யுடன் கலந்தாலோசித்தோ அல்லது கருத்துக்கேட்டோ அல்லது ஈ .பி .டி பி முன்னணியுடன் இணைய விருப்பமின்றி கூட்டமைப்புடன் இணைந்து செயற்ப்பட முன்வந்ததோ என எந்த காரணமாக இருப்பினும் இவை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பங்காளிக்கட்சிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கூறிய விடயம் ஈ .பி .டி .பி இடமோ அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிடமோ ஆதரவு கோரக்கூடாது என கண்டிப்பாக தெரிவித்திருந்தார் இந்த கண்டிப்பினை மீறியா மாவை சேனாதிராஜா ஈ .பி .டி .பி யுடன் இணைந்து சபைகளை அமைக்க முனைந்தார் என்ற பெரும் கேள்வி இப்போ மக்கள் முன் வந்து நிற்கின்றது .

கூட்டமைப்பு சட்ட திட்டங்கள் என்பது எல்லோருக்கும் பொதுவானதே ஆனால் தலைவரின் கருத்தை மீறிய ஆட்சியமைப்பு என்பது என்ன சூட்சுமத்தை கொண்டுள்ளதாக இருக்கும் என்பது புதிராகவே இருக்கின்றது .

இந்த சந்தற்பத்தில்த்தான் கூட்டமைப்பின் செயற்ப்பாடு மக்களுக்கு அதிருப்தியை கொடுக்கின்றது எனலாம் .

காலப்போக்கில் இவை என்ன வடிவிலான அரசியல் முடிவுகளை தரப்போகின்றன என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்

– பிரியா – இராமசாமி

மாவீரர்கள்