Sanskathi
Apr 23

ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து: மஹிந்த அமரவீர கூறுகிறார்

ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து: மஹிந்த அமரவீர கூறுகிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள ஆலோசனைகளின்படி தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லும் வகையில் புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று 22 ஆம் திகதி நாடு திரும்பியதும், இந்தப் புதிய ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஐ.ம.சு கூட்டமைப்பும், ஐ.தே.கட்சியும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச்செல்வது குறித்தும் விரிவாக ஆராயப்படுவதுடன் புதிய ஒப்பந்தத்துக்கும் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

 இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு திராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த தால் அரசாங்கத்தை விட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளியேறியதை அடுத்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்நிலை ஏற்பட்டது.

16 பேர் குழுவின் முடிவை ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்காக அமைச்சர் சந்திம வீரக்கொடி பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் லண்டனுக்குச் சென்றிருந்தனர். இந்தப் 16 பேர் குழு அரசாங்கத்தை விட்டு விலகி எதிர்க்கட்சியில் தனியாக இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

 இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியுள்ள அமைச்சர்கள் - பிரதியமைச்சர்களுடன், தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

மாவீரர்கள்