Sanskathi
May 07

நீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் !

நீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் !

நீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம் நியாயப்பாட்டையும் தங்களது விடுதலை வேட்க்கையையும் வெளிக்கொண்டு வருவதற்காக பல அற்புதமான ஊடகவியலாளர்களை களப்பலி கொடுத்துள்ளது. போற்றுதலுக்குரிய வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவர்களின் சமகாலத்தில் மறுபுறம்;  துரோகிகளாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனி நபர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி மேடை ஏற்றி வெள்ளையடிக்கின்ற வேலைகளை நடுநிலை என்னும் பக்கவாத்தியத்துடன் கன கச்சிதமாக அற்ப சலுகைகளுக்காக சில ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் செய்கின்றனர் என்பது மறுக்க முடியாத மிக கசப்பான நிதர்சனமான உண்மை.  

ஊடகத்துறை அதனோடு சார்ந்த விடயங்கள் என்று சொல்லுகின்றபோது ஒரு சமூகத்தினுடைய எழுற்ச்சியையும் அதனுடைய இருப்பினையும், அதனுடைய முன்னேற்றத்தினையும் தோழில் சுமந்து செல்லுகின்ற ஒரு பாரிய சக்தியாக ஊடகத்துறையை பார்க்க முடியும். 

உலகிலே இன்று நசுக்கப்பட்டு ஆங்காங்கே நலினமாக இரத்தங்கள் சிந்துகின்ற தமிழ்த் தேசிய இனம் தமிழர்களாக இருந்தாலும் ஊடகம் என்கின்றதொன்று சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் இவர்களுக்கு இல்லாதது துரதிஸ்டவசம் அவர்களுக்கு ஏற்படுகின்ற, அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற ஒடுக்கு முறைகளையும், வன்முறைகளையும், அநியாயங்களையும் உலகிற்கு சொல்லுவதற்கும் மற்றயவர்கள் தெரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இல்லாத ஒரு காரணியாக எமது சமூகத்திற்கென்று குறிப்பாக தமிழர்களுக்கென்று ஒர் தனியான வீரியமிக்க ஊடகம் இல்லையென்றுதான் சொல்ல முடியும். 

தமிழர் தாயகப் பகுதிகளிலும் மற்றும்  தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசிய இனத்தின் விடயங்களை முன்கொண்டு வருவதற்கு அதனை வெற்றிகரமாக தமிழர் தேசங்களில் இன்னும் பல ஊடகங்கள் ஆளுமையுடன் வெளிப்படையாக தமிழ்த் தேசிய  இனத்தின் குரலாக வரவேண்டுமென்பதே எங்களுடைய அவா. 

பக்கச்சார்பில்லாத அல்லது நடுநிலையான ஊடகம் என்பதன் கருத்து மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை ஒன்றாக அழைத்து ஒரே மேடையில் அமர்த்துவதல்ல நடுநிலையான ஊடகம்.

நடுநிலையான ஊடகம் என்பது எவர் எந்தக்கட்சி சார்ந்தவராக இருந்தாலும் அவருடைய தமிழ்த் தேசியசார் பொதுவிடயங்களை உண்மைக்கு புறம்பில்லாமல் தெளிவாக சொல்வதே நடுநிலை ஊடகம். ஆகவே இந்த தமிழ்த் தேசியம் சார்ந்த நடுநிலை என்பது ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் இருக்க வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பு. 

ஊடகவியலாளர் தனிப்பட்டரீதியில் எந்தக்கட்சியை, அமைப்பை, மதத்தை,.. சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்தியினை சொல்லுகின்றபொழுது இவை அனைத்துக்கும் அப்பால் நின்றுகொண்டு அவர் பேச வேண்டும். 

ஆகவே விமர்சனம் என்பதும் ஒருவர் மீது கொள்ளுகின்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது.

மாறாக குறிப்பிட்ட வலைத்தளத்தினூடாக அல்லது முகபுத்தகத்தினூடாக கொடுக்கப்படுகின்ற உள்ளீட்டல்கள் தமிழ்த் தேசிய உணர்வு அற்றவர்களை 

தமிழ்த் தேசியத்தில் பற்று உள்ளவர்களாக மாற்றுகின்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இதனை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது. 

ஊடகங்களில் எல்லாவிதமான செய்திகளும் வரவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் ஊடகத்தில் பேசமுடியாது.

நடுநிலை, வெளிப்படைதன்மை என்பது ஊடகத் துறையை பொறுத்தமட்டில் அது மிக நிதானமாக நோக்கப்பட வேண்டிய விடயம். குறிப்பாக அதிகார வர்க்கங்களுக்கு சாமரம் வீசுகின்ற செயற்பாடுகளைச் செய்யாமல் ஒடுக்கப்படுகின்ற தழிழ் மக்களின் குரலாக, அவர்களின் மொழியாக தழிழ்த்தேசிய இனத்தின் உள்ளிருந்து வரவேண்டும். 

சர்வதேசமென்பது தனது நலன் சார்ந்து பூகோள அரசியல் வர்த்தகச்சுரண்டல்களை நியாயப் படுத்துவதற்காகவும், தன்னிச்சையாக தாங்கள் செய்கின்ற இராணுவ முன்னெடுப்புக்களை நியாயப் படுத்துவதற்காகவும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தன்னகத்தே கொண்டு நகர்கிறது.  

இவ்வாறான பூகோள அரசியல், வர்த்தக, இராணுவ முன்னெடுப்புக்களுக்கு நடுவில் தமிழினம் தனது தேசியம் சார்ந்த அபிலாசைகளை முன்நகர்த்துவதற்க்கும் பரப்புரை செய்வதற்கும் ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளர்களும், தமிழ் மக்களும் முன்வர வேண்டும். 

எதிர்காலத்தில் பேப்பர் மீடியா என்கின்ற ஒன்று இல்லாமல்ச் சென்று வலைத்தளங்களினூடாக, நவீன தொழில்நுட்பத்தினூடாக மாத்திரம் தகவல்களை அறிந்து கொள்ளும் யுகத்திற்குள் நுழையும்போது இவ்வாறான நவீன தொழிநுட்பத்தினூடாக தமிழ்த் தேசியம் சார்ந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றபோது அந்த பரிமாற்றம் என்பது ஒரு வினாடியில் இலட்சக்கணக்கானவர்களை சென்றடையும். 

ஆகவே நாங்கள் பதி இடுவதற்கு முன்பு நூறு வீதம் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பத்திரிக்கையில் பிழையான செய்தி ஒன்று தவறுதலாக பிரசுரிக்கப்பட்டால் அது வாசகர்களை சென்றடைவதற்கான கால அவகாசம் இருக்கின்றது. ஆனால் இலத்திரனியல் ஊடகத்தில் அவ்வாறான சந்தர்ப்பம் குறைவு ஒரு வினாடியிலும் குறைந்த மில்லி செக்கனில் நாங்கள் கொடுக்கின்ற

தமிழ்த் தேசியம் சார்ந்த தமிழீழ விடுதலையின் அவசியத்தை பிரதிபலிக்கின்ற செய்திகள்  இலட்சக்கணக்கானவர்களை உலகளாவிய ரீதியில் பல திசைகளுக்கும் கொண்டு சேர்த்துவிடும்.  

எனவே நீங்கள் பதிய விடுகின்ற பதிவுகள் தமிழ்த் தேசியம் சார்ந்த தமிழீழ விடுதலையின் அவசியத்தைப் பிரதிபலிக்கின்ற செய்திகளாக கலை, பண்பாட்டுக் கூறுகளாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருங்கள்.

தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை ஒவ்வொன்றாக மிக அவதானத்துடன் பங்காற்ற வேண்டிய தேவைப்பாடு ஊடகவியலாளர்கட்கு இருக்கின்றது. தமிழ்ச் சமூகத்தை விழிப்பூட்டுகின்ற, அறிவூட்டுகின்ற விடயத்தில் உங்களுடைய செயற்பாடு அதிகமாக இருக்க வேண்டும்.

நவீன உலக ஒழுங்கில் தமிழ்த் தேசிய இனம் தனது அரசியல், மொழி, பண்பாட்டு, பொருளியல்  விழுமியங்களை கரைத்து விடக்கூடாது; தமிழ் இனம் தலைமுறை கடந்தும் தன்னை தற்க்காத்துக் கொண்டு நிலைப்படுத்த வேண்டும்.

© களத்தில்

- ஈழத்து நிலவன் -

மாவீரர்கள்