Sanskathi
Sep 14

இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை சிக்களை ஏற்படுத்தும்

இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை சிக்களை ஏற்படுத்தும்

அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்க கூடிய ஐ.தே.க.யின் சிலர் பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரி, இராணுவ தளபதி உள்ளிட்டோருக்கு எதிராக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையானது நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சிக்களை ஏற்படுத்துமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இவ்வாறு இராணுவ அதிகாரி மற்றும் நிறைவேற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் செயற்பாடானது நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

அத்துடன் முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தற்போதைய இராணுவ தளபதிக்கு எதிராக பல்வேறு குறைகளை கூறுகின்றார். அதாவது அவர் தலையில் முடியில்லாததை கூட கேலி செய்கின்றார். இத்தகைய செயல் சிறந்ததொன்றல்ல.

மேலும் சரத் பொன்சேக்கா, நல்ல இராணுவ வீரராக இருந்தாலும் அவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன.

யுத்தத்தின்போது நேரடியாக தொடர்பு கொண்ட சரத்பொன்சேக்கா, இராணுவத்தில் ஒரு பிரபலமானவொருவர் அல்ல. ஆனால் தற்போதைய இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, இராணுவத்தின் ஏனைய வீரர்களுடன் நல்லுறவுடனும் சகோதரத்துவத்துடனும் பழகுவதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் செயற்படக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று 8 வருடங்களுக்கு முன்னர் இருந்த இராணுவ தளபதியுடன் ஆலோசனை கேட்காமல் சுயாதீனமாக செயற்படுகின்றமையானது ஒரு ஒழுக்க ரீதியாக நன்றாக செயற்படகூடிய இராணுவ வீரருக்கு உரிய பண்பா இது” என  எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.