Sanskathi
Oct 20

ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு

ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லி தாஜ்ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கடற் பயணத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை ஆரம்பித்துள்ள செயல்திட்டம் தொடர்பாக இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ஆனந்த சர்மா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது, வலயபொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் கருத்து பரிமாறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ள காங்கிரஸ் தூதுக்குழு ஆர்வம் காட்டியுள்ளது. எதிர்கால ஆசியாவின் அமைப்பு மற்றும் வகிபாகம் தொடர்பாகவும் அடிப்டைவாதத்தை ஒழிப்பதன் அவசியம் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது அழைப்பு விடுத்ததோடு அவர்கள் இந்த அழைப்பை நன்றியுடன் ஏற்றுக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, சாகல ரத்னாயக்க, மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வர, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இன்று (20) புதுடில்லி ஹைதராபாத் மாளிகையில் நடைபெறும் என்றும் பிரதமர் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.