Sanskathi
Oct 20

வங்கிப் பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் அமைச்சருக்கே இருக்கிறது

வங்கிப் பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் அமைச்சருக்கே இருக்கிறது

வங்கிப் பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே இருக்கிறது. இது வரை எந்த வங்கிப் பணிப்பாளர் சபையும் கலைக்கப்படவில்லை என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தேசிய சேமிப்பு வங்கியின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றின் கீழ் 428 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு கம்பளையில் நடைபெற்றது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தான் இருக்கிறது. இரு பணிப்பாளர் சபைகளையும் மீளமைக்குமாறு ஜனாதிபதி என்னிடம் எழுத்து மூலம் கேட்டிருந்தார். ஆனால் இரு பணிப்பாளர் சபைகளும் கலைக்கப்படவில்லை.

ஜனாதிபதி பரிந்துரைக்கும் பெயர்களை தருமாறு  ஜனாதிபதியிடம் நான் கோரியுள்ளேன். அதன் பிரகாரம் அடுத்தவாரம் தகுதியான புதிய அதிகாரிகளை நியமிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான இரு வங்கிகளின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு தகவல் சென்றால் எமது நாட்டைப்பற்றி என்ன நினைப்பார்கள். இரு வங்கிகளும் வங்குரோத்தடைந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான நிலை ஏற்படும். இது தேசத்துரோகச் செயலாகும்.நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2019 வரவு - செலவுத் திட்டத்தினூடாக மக்களுக்கு பல சலுகைகள் கிடைக்க இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதை விடுத்து வரவு, செலவுத் திட்டத்தை தோற்கடித்து காட்டுமாறு சவால் விடுவதாகவும் கூறினார். ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இரகசியமாக பேசி வருகின்றனர்.ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள பலர் விரக்தியடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.