Sanskathi
Oct 20

தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம்: வலுக்கும் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம்: வலுக்கும் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை மலையக அரசியல் தலைவர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி போகாவத்தை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

தலவாக்கலை- நாவலப்பிட்டி பிரதான வீதியின் கெலிவத்தை சந்தியில் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள், “அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவிற்கேற்ப சம்பள உயர்வு கிடைக்கின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கவாதிகள் தமக்கான ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது முதலாளிமார் சம்மேளனத்தின் கொடும்பாவி எரியூட்டப்பட்டதோடு, பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இவ்விடயம் தொடர்பாக கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை தோட்ட அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.