Sanskathi
Dec 01

யாரை ஆதரிக்க வேண்டும் ?.V.வின்.மகாலிங்கம்

யாரை ஆதரிக்க வேண்டும் ?.V.வின்.மகாலிங்கம்

தேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக    ஒப்பந்தம் செய்தவர். ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானங்கள் 30-1 மற்றும் 34-1 க்கு அனுசரணை வழங்கியவர். (அதனை முற்றாக  எதிர்த்து வருபவர் மகிந்த.)  19ம் திருத்தச் சடடத்தின் மூலம் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சியை ஒழித்தார். (19ம் திருத்தத்தை மகிந்த தரப்பினர் மிக மூர்க்கமாக எதிர்க்கின்றனர்). புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை திருத்தமின்றி இம்மாதம் சபைக்குக் கொண்டுவர இருந்தார்.  

இரணிலின் ஆட்சியில் அடக்குமுறை இல்லை. ஜனநாயகப் போராட்டங்கள் தாராளமாக முன்னெடுக்கப் படுகின்றன. நீதிக்காகக் குரல் கொடுக்கலாம். உயிர் நீத்த போராளிகள் உட்பட அனைவரையும் நினைவேந்தலாம். மாவீரர் தினமே கொண்டாடலாம். பொலிஸ் மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றது. (இராணுவத்தினர் முகாம்களுக்குள்)  ஆணைக்குழுக்கள் மூலமே நீதி நிர்வாகம், தேர்தல் மற்றும்  பொதுச்சேவை நிர்வாகம் என்பன அரசியற் தலையீடின்றி  சுயாதீனமாக  நடைபெறுகின்றன. (இப்போது மகிந்த சட்ட விரோதமாகவே பழைய சர்வாதிகார போக்கில்  திரை மறைவில் அவற்றில் தலையிடுகின்றார்.)  புதிதாக சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வில்லை. மகிந்த காலத்தின் பழைய L வலயமும் இடைநிறுத்தப் பட்டுள்ளது. ஒரு ஊடகவியலாளன் கடத்தப்படவில்லை. கொல்லப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40,000 வீடுகள்  2016-2017 இல் கட்டிக்கொடுக்கப் பட்டது. இந்த ஆண்டு (2018-2019) மேலும் 25,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட இருக்கிறது.

மயிலிட்டி, காங்கேசன்துறை துறைமுகங்கள் சீரமைக்கப்பட இருக்கின்றன. பலாலி விமான நிலையம்  மேம்படுத்தப்பட இருக்கிறது. காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை கைத்தொழில் பேட்டையாக மாற்றப்பட இருக்கிறது. கிழக்கில் காகிதத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் படவிருக்கிறது.

விக்கிரமசிங்க 2017 இல் ஒவ்வொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இரண்டு கோடி ஒதுக்கினார். இந்த ஆண்டு ஒவ்வொரு ததேகூ நா.உறுப்பினர்களுக்கும் ரூபா 10 கோடி தொகுதி அபிவிருத்திகளுக்கு ஒதுக்கப்பட்டது. சம்பூரில் தொடங்கி 65 வீதத்திற்கும் மேலான தனியார் காணிகள் விடுவிக்கப் பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் விடுவிக்கப் படுகின்றன.    அரைப்பங்கிற்கும் மேலான அரசியற் கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர். 

இராசபக்ச ஒரு அரசியற் கைதியையும் விடுவிக்க வில்லை. அவர் சரணடைந்தவர்களைத்தான் விடுவித்தார். மகிந்த அதி தீவிர சிங்கள - பவுத்த பேரினவாதி. மாகாண சபைகளையும் கலைப்பதற்காக 13ஏ திருத்தச் சட்டத்தை நீக்க 2013 இல் முயற்சி செய்தவர். அவரது ஆட்சியில் கப்பங் கேட்டு ஆட்கடத்தல்,  ஊடகவியலாளர்கள் கடத்திக் கொலை (அவர் ஆட்சியில் 21 தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள்) கிறீஸ் பூதம், வெள்ளைவான் கடத்தல் என்பன மிகவும் தாராளமாக நடைபெற்றன. போர் முடிந்த பின்னர் தமிழர் பகுதிகள் மிகக் கொடிய இராணுவ அடக்குமுறையின் கீழ் முழு இலங்கையையும் சிங்களப் பவுத்த நாடாக்கும் செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. தமிழர் பகுதியில்  இராணுவக் குடியேற்றங் களுக்காக வேண்டி போர் முடிந்த பின்னரும் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு பல மடங்காக கூட்டப்பட்டது. தமிழர் பகுதியில்    எந்த அபிவிருத்தியும் இல்லாமல் தமிழ் இனம் அழிவதையே ஊக்குவிக்கப் பட்டது.  ஒரு வீட்டைத்தன்னும் (2009-2014) இராசபக்சா கட்டிக் கொடுக்கவில்லை. இராசபக்சா காலத்தில் தமிழர் தொகுதி மேம்பாட்டுக்கு மிகச் சிறிதளவான நிதியே ஒதுக்கப்பட்டது.

மகிந்த திருந்தி விட்டாரா?.

சட்டத்திற்கு முற்றிலும் மாறாக, ஜனநாயக விரோதமாக வாரவிடுமுறைக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை, இரவு நேரமாக பின்கதவால் பிரதமராகி பெரும்பான்மையைப் பெறுவதற்காக  கப்பம்,பணப்பட்டுவாடா மற்றும் பதவிவழங்கலால்  நாடாளுமன்ற உறுப்பினரை சந்தைப்பொருளாக்கி அந்தச் செயற்பாட்டிற்கான கால அவகாசமாக  நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, அது முடியாதபோது இன்னொரு வெள்ளி இரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து, அது நீதிமன்றத்தால் தடுக்கப்பட்ட போது சண்டித்தனத்தால் நாடாளுமன்றை நடக்க விடாமல் மிளகாய்த்தூளை ஆயுதமாக்கி  அட்டகாசம் செய்யும் ஒரு சர்வாதிகாரக் கும்பலின் நாயகன்தான் மகிந்த. மகிந்த காலத்த்தின் மிகப் பாரிய மோசடிகள் சம்பந்தமான ஆணைக்குழுவின் 32 அறிக்கைகளை இதுவரை வெளியிடாமல் ஜனாதிபதியைத் தடுத்துக் கொண்டிருக் கின்றார்கள். அப்படியான கும்பலின் ஆட்சியில் நாடும் தமிழினமும் எப்படி இருக்கும் என்று சொல்லித்தான்   தெரிய வேண்டுமா?.            

ரணில் எமது இரட்ஷகரோ அல்லது நண்பன் கூட இல்லை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எதிரிதான். ஆனாலும்  இராசபக்சாவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வேற்றுமை இல்லை என்பது வெறும் வரட்டு வாதம். உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டி உள்ளது. இன்றய நிலையில் மகிந்தவை ஆதரிப்பதால் மட்டுமல்ல நடுநிலை வகிப்பதாலும் அவரையே நாம் வெல்ல வைக்கின்றோம் என்பதை அறியாத எண்கணிதம் தெரியாத தமிழர் இருக்க முடியாது.  சனநாயக முறைமையில் மக்கள்தான் எசமானர்கள். அவர்கள் புத்திசாலிகள். சில நச்சு ஊடகப் பிரச்சாரங்களுக்குப் பயந்து நாம் நடுநிலை என்று  மக்களுக்குப் பொய் சொல்லத்  தேவையில்லை. மகிந்த  வெல்வதற்கு இடமளித்து  த.தே.கூ. நடுநிலை வகிக்க வேண்டுமா?.

இரண்டு பகையில் ஒன்றை நாம்  துணையாகக் கொள்ள வேண்டும். இரண்டு தீமைகளுக்கு இடையில் குறைந்த தீமையை நாம் தெரிவுசெய்ய வேண்டும். இலங்கை  நாடாளுமன்றத்தால்  ஏற்படும் நன்மை தீமைகள் தமிழினத்தையும் நிட்சயம் பாதிக்கின்றன. அதனாலேதான்  நாடாளு மன்றத்திற்கு   நாம் போட்டியிடு கின்றோம். அதில் பங்கு பற்றுகின்றோம். பயன்படுத்துகின்றோம். நாடாளுமன்றத்தில் நாம் நடுநிலை வகிப்பதால் நாடாளுமன்ற செயற்பாடுகள் நிற்கப் போவதில்லை. எமக்குப் அதிக பாதகமான நிலையைத் தடுத்து இருப்பதில் பாதகம் குறைந்ததைத் தெரிவு செய்வதைத்தவிர நமக்கு அங்கு வேறு என்னதான் வேலை?.நாம் வேறு என்னத்தைத்தான் அங்கு செய்யலாம்?. நாமே  அரசாங்கத்தை நடத்தி ஈழத்தை எழுதிக் கொடுக்கவா முடியும்?. அல்லது  நாடாளுமன்ற உறுப்பினர் தமது ஊதியம் சலுகைகளை பெறுவது மட்டும்தான் அங்கு அவர்களின் வேலையும் கடமையுயா?. தீர்மானங்களை எடுப்பதில் பங்கு பற்றவே கூடாதா?.   

மகிந்தவை ஆட்சியில் நிலைநிறுத்தவே சில பிணம்தின்னி தமிழ் வியாபாரிகள் நடுநிலையைப் பற்றிப் பெரியளவில் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்கள். இவர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்தால் மகிந்தவை விடவும் மோசமாகவே இருக்கும் என்பதை எவரும் அறிந்து கொள்ளலாம். எமது பொது எதிரியை மட்டுமல்ல உட்பகையையும் வெல்லவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் சரியாகவே சிந்திப்பார்கள். தெளிவு படுத்தினால் தெரிந்து கொள்வார்கள். எப்படியும் தமிழ் இனத்தின் வெற்றி நிட்சயமே.