துயர்களைக் கடந்து எமது போராட்டங்களை முன்னெடுப்போம்: கேப்பாப்புலவு மக்கள்
எமது பூர்வீக வாழிடங்களைப் பெறுவதற்கான போராட்டங்களில் எதிர்நோக்கும் துன்பங்களைக் கடந்து வெற்றிபெறுவோம் என கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சிவப்பிரகாசம் அரியகலா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது போராட்டம் இன்றுடன் 693 நாட்களைக் கடந்துள்ளது. எமது பூர்வீக வாழ்விடங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் வீதியோரங்களில் பல துன்பங்களைச் சந்தித்துப் போராடி வருகின்றோம்.
இவ்விடயம் தொடர்பாக தென்னிலங்கைக்கும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே நாம் இன்றைய ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இதுவரை எமக்கு எந்தத் தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்று நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்தோம்.
இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எமது விடயம் தொடர்பாக மேலும் அழுத்தங்களை வழங்கி எமது வாழ்விடங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.