Sanskathi
Jan 24

கருத்து சுதந்திரப்படுகொலை – சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட – பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட நாள் இன்று

கருத்து சுதந்திரப்படுகொலை – சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட – பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட நாள் இன்று

இலங்கையில் கடுமையாக நிலவிய கருத்துச்சுதந்திரப்படுகொலையை நினைவுபடுத்தும் நாள் இன்றாகும். இதேபோல் ஒரு நாளில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொல்லப்பட்டதுடன் ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டார். இலங்கையில் நிலவிய கடுமையான ஊடக சுதந்திர மறுப்பை வெளிப்படுத்தும் இந்த இரு நிகழ்வுகளும் சர்வதேச ரீதியில் கவனம் பெற்றவை ஆகும்.

ஐந்து மாணவர் படுகொலையின் சாட்சி சுகிர்தராஜன்

சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (டிசம்பர் 12, 1969 – சனவரி 24, 2006) இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர். எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்டவர். சுடர் ஒளி பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்தவர். ஈழப் போர்க் காலத்தில் இவர் திருக்கோணமலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருகோணமலை நகரின் போர்ச் சூழலில் இருந்து பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்றா நியூசில் ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.

சுகிர்தராஜன் மட்டக்களப்புக் குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி என்பவற்றிலும் பயின்றார். பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் எழுத்தளராகப் பணியில் சேர்ந்தார்.

2006 சனவரி 24 இல் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பிலான ஆதாரங்களை நிழல்படங்களாக இவர் முன்னர் வெளியிட்டிருந்தார்.

கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை இவர் சுடரொளியில் வெளியிட்டிருந்தார். இப்படுகொலை குறித்து எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை. திருமணமான இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர்

தமிழருக்காக குரல் கொடுத்த சிங்கள ஊடகவியலாளர்

பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியரும் ஆவார். சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.

இவர் இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010, சனவரி 24 ஆம் நாள் இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தையில் வைத்துக் காணாமல் போனதாக முறையிடப்பட்டது. இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்

இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி “போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்’ என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும் ஒருவர்.

எக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் எக்னலிகொட காணாமல் போனமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

மாவீரர்கள்