Sanskathi
Feb 08

பிரான்ஸ் -இத்தாலி முறுகல் நிலை தீவிரம் : இத்தாலிக்கான தூதுவர் மீளழைப்பு!

பிரான்ஸ் -இத்தாலி முறுகல் நிலை தீவிரம் : இத்தாலிக்கான தூதுவர் மீளழைப்பு!

பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் தீவிரமடைந்த நிலையில் பிரான்ஸ் தனது தூதுவரை மீள அழைத்துள்ளது.

இத்தாலிய தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆதாரமற்ற தாக்குதல்கள் மற்றும் யதார்த்தமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக இத்தாலிக்கான தூதுவரை மீளழைத்துள்ள பிரான்ஸ், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததற்கு பின்னர், முன்னெப்போதும் நிகழாத அபூர்வமான சம்பவங்களாக இவை இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியின் துணை பிரதமர் லுய்கி டி மையோ, யெலோ வெஸ்ட் போராட்டக்காரர்களை கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸூக்கு அருகில் வைத்து சந்தித்ததை அடுத்தே இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் நிலை தீவிரமடைந்தது.

பிரான்ஸ், தமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இரண்டு நாடுகளும் முன்னர் சிறந்த உறவுகளுடன் செயற்பட்டு வந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய அங்கத்தவர்களாகவும் திகழ்கின்றன.

எனினும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் வலது சாரி லீக் கட்சி கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபித்ததுடன், இத்தாலியின் பிரபலமான ஐந்து நட்சத்திர இயக்கம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை, இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் குடியேற்றவாசிகளின் பிரச்சினைகள் உட்பட மேலும் சில நெருக்கடிகளால் பரஸ்பரம் முறுகிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்