Sanskathi
Feb 15

19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை பாதுகாக்கப்பட வேண்டும் எழுதியவர் ஹரிம் பீரிஸ்

19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை பாதுகாக்கப்பட வேண்டும் எழுதியவர் ஹரிம் பீரிஸ்

சனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள்  வாக்களித்தார்கள். அவர்கள் (அரசியல்) பாரிய சீர்திருத்தத்திற்கு ஆணை வழங்கினார்கள். சனாதிபதி தேர்தலுக்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வேறுபட்ட எதிர்க்கட்சிகளது வானவில் கூட்டணியும் சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கின. அவர்களது தெரிவு மயித்திரிபால சிறிசேனாவாக இருந்தது. இராசபக்சாவின் நிருவாகத்தில் இருந்து அண்மையில் அணிமாறிய சிறிசேனா தனது முந்தைய எசமானருக்கு எதிராக மிகக் கடுமையான கண்டனத்தை முன்வைக்கத் தொடங்கினார். அதன் பயனாக மிக ஆழமாக (அரசியலில்) வேரூன்றிய மற்றும் பிரபலமான சனாதிபதியைத் தோற்கடித்தார். இராசபக்சா போரை முடிவுக்குக் கொண்டுவந்த தனது வெற்றியை ஒரு தெம்புகோலாகப் பயன்படுத்தி மூன்றாம் முறையும் 18 வது திருத்தத்தின் கீழ் சனாதிபதியாக வர முயன்றார். 

சிறிசேன நிருவாகத்தின் இரண்டாவது 100 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது ஒரு சாதனையாகும். இந்தத் திருத்தம் 18 வது திருத்தத்தை மாற்றியமைத்து சனாதிபதியின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தது. அதற்கும் மேலாக சுயாதீன ஆணையங்கள் நிறுவப்பட்டு முக்கிய அரச நியமனங்களில் அரசியலமைப்பு ஆணைக் குழுவின் வகிபாகத்தை வலுப்படுத்தியது. 

உண்மையில் இது ஒரு புதுப்பிக்கப்பட்ட இலங்கைக்கு வழிவகுத்தது. இதனால் மூத்த பொலிஸ் அதிகாரிகள் தங்களது தொழில்சார் கடமைகளையும் பணி முன்னேற்றத்தையும் அரசியல்வாதிகளின் தலையீடின்றி சுயாதீனமாக மேற்கொள்ள முடிகிறது. தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்கா பதவி நீக்கம் செய்யப்படும் கீழான நிலையிலிருந்து நீதித்துறை மீண்டுள்ளது. உயர் அரச நியமங்களை அரசியலமைப்பு சபை செய்ய வழிபிறந்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட முக்கிய சுயாதீன ஆணையங்கள் நிறுவுவப்பட்டுள்ளது. இது இலங்கையின் முக்கியமான முன்னேற்றமும் மிக முக்கியமான அரச சீர்திருத்தமும் ஆகும். 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்தை சனாதிபதி சிறிசேன பாராட்டினார். அது சரியானதே. அந்த மரபு காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். 

அண்மைக் காலங்களில், சனாதிபதி சிறிசேன திடீர் அரசியல் குத்துக்கரணம் ஒன்றை அடித்துள்ளார். இது முழுமையான மாற்றமாகும். இராசபச்சாவின் நிருவாகக் கொள்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்துவிட்டு இப்போது தனது அரசியல் எதிர்காலத்தையும் அனுகூலத்தையும் கருதி இராசபக்சாவின் அரசியல் மீள் வருகையோடு தன்னை இணைக்கப் பார்க்கிறார். இது சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்காகக் குரல் கொடுத்த  அவரது சொந்த நிலைப்பாட்டுக்கு மாறானது. இருந்தும் அது அவரது அரசியல் உரிமை  என்றபோதிலும்  அவர் அப்படி நடந்து கொள்வது புத்திசாலித்தனமா என்பது ஐயப்பாடே. ஆனால் இலங்கையின்  பெரும்பான்மையினரால் ஆணை வழங்கப்பட்ட 2015 (ஆண்டு)  சீர்திருத்தங்களின் நன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.  இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் சனாதிபதி தேர்தல்  வரயிருக்கும் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலின் அரசியலைப் பொறுத்தவரை, பொதுக் கொள்கை விவாதத்தை குறைத்துக் காண்பிக்கிறது.

கூட்டு அரசியலமைப்பு சபை

கூட்டு அரச அரசியலமைப்புச் சபையானது முக்கிய அரச நியமனங்கள் தொடர்பாக  சுயாதீனமாகவும் கவனமாகவும் ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கும் அடிப்படைக் கொள்கையைக் கொண்டது.  சிறிலங்காவைப் பொறுத்தளவில்  இது உயர் நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணையங்களின் உறுப்பினர்களை நியமிப்பது ஆகும். இந்த நியமனங்கள் நிறைவேற்று அதிகார தலையீடு இல்லாமல் சுயாதீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.   சில ஆணையங்களின் பெயர்களைச்  கூறவேண்டும் என்றால்  மனித உரிமைகள் ஆணையம், பொலீஸ் ஆணையம் அல்லது கையூட்டு அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணையம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த ஆணையங்களை அரசியலமைப்புச் சபை  ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை செய்கின்றன. 

இலங்கை ஒரு கவர்ச்சிகரமான வலிமைவாய்ந்த ஆண்களால் (அல்லது பெண்களால்) ஆளப்படுவதற்குப் பதில் நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களால் ஆளப்பட வேண்டும். அரசாங்கம் இறைமை படைத்த மக்களுக்குப்  பொறுப்புக் கூறக்கூடடியதாகவும் மற்றும் ஆட்சியானது  வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். காலத்துக்குக் காலம்  நடைபெறும் தேர்தல்களுக்கு அப்பால் சென்று பொறிமுறைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் உறுதிப்படுத்தப் படவேண்டும். இந்த இலக்கை மேம்படுத்துவதன் பொருட்டே  முக்கிய  நீதித்துறை மற்றும் ஒழுங்குமுறை  குழுக்களுக்கு  பதவிகளுக்கு நியமனம் செய்யும் போது அரசியலமைப்பு சபை  கூட்டு முடிவுகளை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் - சிறிலங்காவின் பொதுசன பெரமுன வேட்பாளர் ஒரு அமெரிக்க குடிமகன் - முக்கிய அரச நியமனங்கள் அமெரிக்க கீழ்ச் சபையால் உறுதிப்படுத்தப் படவேண்டும்.  மன்னன்  லூயிஸ் XIV  "நானே அரசு" ("I am the state") என்ற பழமொழியின்  காலம் முழுமையான முடியாட்சிக்காலம்.  அது இன்று  முடிவடைந்து விட்டது.

இந்தப் பகுப்பாய்வு குறிப்பிட்ட உயர் மட்ட நியமங்களின் குறிப்பிட்ட நன்மைகள் அல்லது குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வதில் ஈடுபட முயற்சிக்கவில்லை. அது நிச்சயம் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் அவர்களது வேட்பாளர்களையும் மூன்று முக்கியப் பிரிவினரல்லாத நபர்களையும் உள்ளடக்கிய அரசியலமைப்புக் குழுவின் பத்து அங்கத்தவர்களை ஒருங்கிணைத்து, ஒரு பெரிய தவறு செய்வது சாத்தியமில்லை. அது நிறைவேற்று சனாதிபதி போல ஒரு தனி நபரை விட  பாகுபாடற்றதாக இருக்க முடியும்.

அண்மைக் கால நிகழ்வுகள்  அரசியல் அதிகாரத்திற்கான பாகுபாடற்ற சனநாயகப் போட்டியிலிருந்து சிலங்காவின் சனாதிபதி கூடச் சிறிதும் விலகியிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அரசியலமைப்பு சபைக்கு எதிரான கண்டனங்கள் ஒரு திசையிலிருந்து மட்டுமே இருந்து வருகிறது. இராசபக்சாக்களின் அரசியல் கூட்டாளிகளிடம் இருந்தே அப்படியான கண்டனங்கள் வருகின்றன. இதனை நொவெம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க நிகழச்சிகளின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது சனாதிபதி மற்றும் எஸ்எல்பிபி / யுபிஎவ்ஏ இரண்டின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கும் மற்றும் அது தொடர்பான சட்டங்களுக்கும் எதிரான  அதிகார மீறல் ஆகும். இது அதிதீவிர சிங்கள தேசியவாதிகளை உள்ளடக்கிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களது கவனத்தில் இருந்து தப்பிவிட்டது. உண்மையில் சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்துக்கான நியமனங்களைக் கடுமையாக விமர்ச்சிப்பது, சர்வதேச சமூகத்தோடு வாதாடுவது எதிர்விளைவுகளையே பெற்றுத் தரும். இது சிறிலங்காவின் நீதித்துறையின் செயல்படுந்திறனுக்கு நல்லதல்ல. தேசிய மனித உரிமை ஆணையத்தைக் காப்பாற்றுவதில், மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கைக்கு நீண்டகாலமாக சிக்கல் இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட கொலைகள் நடை பெற்ற நாடுகளின் பட்டியலில் நாங்கள்  முன்னுக்கு  இருந்தோம். பொதுவாகச் சொன்னால், இலங்கைச் சமூகம்  நீண்ட காலமாக நடைபெறும் உள்நாட்டுப் போர்  காரணமாக  பாதுகாப்பு நலன்களுக்கு முன்னுரிமை அளித்தது.  அதனால் மனித உரிமைகள்,  பாதுகாப்பு நலன்களுக்குப்  பணிந்து போக நேரிட்டது.  அதாவது ரோமானிய மேல்சபையில் சிசரோ ( Cicero) வாதிட்டது போல "தீமைக்கு எதிராக நன்மை நடத்தும் போராட்டத்தில் சட்டங்கள் மௌனித்து விடுகின்றன."  ஆனால் போருக்குப் பின்னர் நாம் மாற வேண்டும். 2015 இல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சனநாயக சுதந்திரங்கள் பலப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக  போர்க் காலம் போல் சமாதான காலத்தில் ஆட்சி செய்ய மேற்கொண்ட முயற்சி தேர்தல் மூலம் தோற்கடிக்கப்பட்டது.  நாங்கள் சனாதிபதி சிறிசேனா அவர்களே வாக்குறுதியளித்தது  போல வெள்ளைவான் கடத்தல் கலாச்சாரத்தை, பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், றக்கர் விளையாட்டு வீரர்கள் எங்கள் வீதிகளில்  தண்டனைக்கு அஞ்சாது மீண்டும் படுகொலை  செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.  சுயாதீனமான ஆணையங்களின் இயக்கம் அவசியமானது. ஒரு சமூகத்தின்  வலிமை வாய்ந்தவர்களைப் பாதுகாப்பதன் மூலம் அல்லாமல் பலவீனர்களைப் பாதுகாப்பதன் மூலம் அளவிட ப் படவேண்டும்.  

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி  தீபிகா உடுகம, ஆணையத்தின் சிறந்த பணிகளைக்  கண்ணியமான ஆனால் மெச்சத்தக்கவாறும்  கெட்டித்தனமாகவும்  பேசியிருந்தார். "ஒரு சுயாதீனமான ஆணையம் ஒரு நாட்டின்  அனைத்துக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.  அதில்  சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட    அல்லது ஒதுக்கப்பட்ட மக்களையும் உள்ளடக்கும்.   காரணம் சனநாயகத்தின்  அல்லது நாகரிக சமூகத்தின் அடிப்படை அடையாளக் குறி  மனித குலத்திற்கு அவர்களுக்கு உரிய உரிமைகளுக்கு  உத்தரவாதம் கொடுப்பதே."

அரசின் 19 ஆவது சட்ட சீர்திருத்தம்  வில்லங்கங்களில் இருந்து   உறுதியற்ற தன்மையில் இருந்து உறுதியோடு வெளிவந்து   இலங்கையின் சனநாயகத்தைப் பலப்படுத்தியுள்ளது.  எனவே அது 2015 இல் அந்த மாற்றத்திற்கு வாக்களித்த 6.2 மில்லியன் வாக்காளர்களால் பாதுகாக்கப்பட வேண்டும்.

குறிப்பு

2015 இல் நிறைவேற்றப்பட்ட 19 ஏ சட்ட திருத்தம் ஒரு தனி நபர் சர்வாதிகார ஆட்சிக்கு பேரளவு முற்றுப்புள்ளி  வைத்து நாட்டில் சனநாயகத்துக்கான இடை வெளியை அதிகரித்தது. இந்த சனநாக இடைவெளி சிங்கள மக்களைவிட தமிழ்மக்களுக்கே அனுகூலமாக இருந்து வருகிறது. இந்தக் கட்டுரை பெப்ரவரி 12 நாளிட்ட The Island  நாளேட்டில் (http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=199311)வெளிவந்தது. தமிழாக்கம் நக்கீரன்.