Sanskathi
Mar 15

தமிழ் கட்சிகள் தங்களுக்குள் முரண்படுவதாக இராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு

தமிழ் கட்சிகள் தங்களுக்குள் முரண்படுவதாக இராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு பல்வேறு திசைகளில் பயணிப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கை அரசாங்கம் ஜக்கிய நாடுகளின் தீர்மானம் தொடர்பாக இரண்டு கொள்கைகளை கொண்டுள்ளதென்றும் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே ஒரு நிலையான தீர்வை பெற முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கினிகத்தேனை கித்துள்கல இங்கோயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்களுக்கான புதிய விடுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”இலங்கையின் முக்கிய பிர்ச்சினைகளில் ஒன்றாக இருப்பது வடக்கு கிழக்கு பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு தற்பொழுது கிட்டியுள்ளது.

இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும் அவ்வாறான சூழ்நிலை தற்போது இல்லை. அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு பக்கமாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றுமொரு பக்கமாகவும் செயற்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

அதுமட்டுமல்லாமல் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் கட்சிகளும் ஒவ்வொரு திசையிலும் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறு செயற்படுவதன் மூலமாக நாம் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.