Sanskathi
Mar 20

இலங்கையில் விசேட நீதிப் பொறிமுறை உருவாக்கப்படாமை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விசனம்

இலங்கையில் விசேட நீதிப் பொறிமுறை உருவாக்கப்படாமை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விசனம்

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று வெளியிட்டார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று விரிவான அறிக்கையினை சமர்ப்பித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இதன்போது கூறியதாவது,

நீண்ட தாமதத்தை அடுத்து, காணாமற்போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதையும் நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதையும் நான் பாராட்டுகின்றேன். அதற்கான ஆணையாளர்கள் குறுகிய காலத்தில் நியமிக்கப்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். கடந்த வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட அவசர நிலைமை, ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியலமைப்பு ரீதியிலான பிரச்சினை ஆகியவற்றால் இந்த நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டமை தெரிகிறது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பின்புலத்தில், இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரலான, சவேந்திர சில்வா உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட நீதிக் கட்டமைப்பொன்றை உருவாக்கும் செயற்பாடு மிகவும் மந்தகதியில் உள்ளது.

நாட்டில் குற்றங்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படலாம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யும் யோசனை நான்கு வருடங்களாக இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இதுவரை அந்த விடயம் நிறைவேற்றப்படவில்லை. 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மரண தண்டனையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.

ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பின்வருமாறு பதிலளித்தார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில வழக்குகள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச தரத்திலான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவம் நிலைகொண்டிருந்த தனியார் காணிகளில் 75 வீதமானவை மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானது. 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 88.87 வீத அரச காணிகளும் 92.16 வீத தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அறிக்கையின் 23 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான விடயத்தை உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட கால நிர்ணய பரிசோதனையில் அது 1499 ஆம் ஆண்டு முதல் 1790 ஆம் ஆண்டு வரையான காலத்தில் புதைக்கப்பட்டவர்களது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை பிரித்தானியாவின் காலணித்துவத்தின் கீழ் இருந்தது. எனினும், எதிர்காலத்தில் இத்தகைய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படலாம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவான அறிக்கையில் இத்தகைய விடயங்கள் உள்ளடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதிலுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் பிரச்சினை எழுவதற்கான வாய்ப்புள்ளது.

ஆணையாளர் அலுவலக அறிக்கையின் 68 சி பிரிவில் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சர்வதேச நீதிபதிகளை இந்த விடயத்துடன் தொடர்புபடுத்திக்கொள்வதில் அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியிலான பிரச்சினை எழுவதாக இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தற்போதைய மற்றும் முன்னாள் ஆணையாளர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளனர்.

நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் இந்த செயற்பாட்டிற்கான நீதிபதியாக இணைக்கப்படுவதாக இருந்தால் அதற்கான பிரேரணை எமது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் மக்கள் கருத்துக்கணிப்பின் ஊடாகவும் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையின் முப்படையினர் பெயரிடப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே யுத்தம் புரிந்தனர். மாறாக மக்கள் ஒரு சாராருக்கு எதிராக அல்ல.

மாவீரர்கள்