Sanskathi
Apr 07

அறிவுரை சொல்ல தகுதி எது ? வாரியார் சொல்கிறார் கேளுங்கள் !

அறிவுரை சொல்ல தகுதி எது ? வாரியார் சொல்கிறார் கேளுங்கள் !

அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கதாகாலட்சபத்திற்காக கரூர் வருகை தந்த போது, ஒரு தாய், தன் 5 வயது குழந்தையை சுவாமிகளிடம் அழைத்து வந்து சுவாமி, இந்த குழந்தை அதிகமாக இனிப்பு சாப்பிடுகின்றது. அதனால் உடல்நிலை தேறமாட்டேங்கிது ! பூச்சித்தொந்தரவு வேறு சொன்னால் கேட்க மாட்டேங்கிது. உங்களை போல, பெரியவங்க சொன்னா ? கேட்கும் அப்படிங்கிற நம்பிக்கையிலே அழைச்சு வந்திருக்கேன்., நீங்கள் அறிவுரை சொல்லுங்கள் சுவாமி என்று கேட்டார். சுவாமிகள் மெல்ல சிரித்து விட்டு, கையில் விபூதி கொடுத்து விட்டு, இன்னும் ஒரு 15 நாள் கழித்து காங்கேய நல்லூருக்கு கூட்டிக் கொண்டு வாங்கம்மா ?  அங்கே அறிவுரை சொல்றேன், அப்படின்னு சொல்லி விட்டாரு, அந்தம்மாவிற்கு ஒன்னும் புரியலை, 15 நாள் கழித்து காங்கேய நல்லூருக்கு கூட்டிக்கிட்டு வரசொல்றாரு, என்னென்னு தெரியலையே, என்று விழித்து வேறு வழியில்லாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். 15 நாள் கழித்து சுவாமியின் சொந்த ஊரான, வட ஆற்காடு மாவட்டம், வேலூருக்கு அருகில் இருக்கும் காங்கேய நல்லூருக்கு கூட்டிக் கொண்டு சென்று சுவாமியின் வீட்டை அடைந்து வணக்கம் சொல்லி கரூரில் இருந்து வருவதாகவும், குழந்தைக்கு அறிவுரை சொல்ல கூட்டிக் கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னார். அதைக் கேட்ட சுவாமிகள் முருகா, முருகா சொல்லி விட்டு திருநீற்றை நிறைய அள்ளி தான் பூசிக் கொண்டு அந்தம்மா கையிலும் கொடுத்து குழந்தைக்கும் நெற்றி நிறைய பூசி விட்டார். பின் குழந்தையை பார்த்து குழந்தாய், அதிகமாக இனிப்புகள் சாப்பிடக்கூடாது, அது உடம்பிற்கு கெடுதி, இனிமேல் அதிகமாக இனிப்புகள் சாப்பிடாதே, என்று சொல்லி விட்டு, சின்னப்புத்தகங்கள் இரண்டு மூன்றை கையில் கொடுத்து போய் வாங்கம்மா என்றார். அந்தம்மா, சுவாமிகளை பார்த்து, சுவாமி கோபிக்காதீங்க, இதை அன்றைக்கே, கரூரிலேயே சொல்லி இருந்தா ? அழைச்சல் செலவு எல்லாமே மிச்சம், ஏன் சாமி அதை செய்யலை என்று கேட்டார். சுவாமி புன்முறுவல் பூத்தபடி அம்மா, அறிவுரை சொல்வது அவ்வளவு லேசு இல்ல, அதற்கு சில தகுதி வேண்டும், சொல்லக்கூடிய அறிவுரையை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அறிஞர்கள் எல்லோருக்கும் இது பொருந்தும் மகா கஞ்சன் நிதி திரட்ட செல்ல கூடாது, ஒரு குடிகாரன் மதுவின் தீமையை பிரச்சாரம் செய்யக்கூடாது அது போல, நீங்க அறிவுரை சொல்ல சொன்ன போது., நான் அதிகமாக இனிப்புகள் சாப்பிடுபவனாக இருந்தேன், ஒரே நேரத்தில் நாளு, ஐஞ்சு லட்டு, ஜிலேபி, பாதுஷாக்களை கூட சாப்பிடுவேன் அதனாலே, அன்னைக்கு, குழந்தைக்கு அறிவுரை சொல்ல தகுதி எனக்கு இல்லாமல் இருந்தது. இப்ப, 15 நாளாக நான், படிப்படியாய் இனிப்புகள் சாப்பிடுவது குறைத்துக் கொண்டு, இப்போதெல்லாம், அளவோடு இனிப்புகள் சாப்பிடுகிறதால, அறிவுரை சொல்ல கூடிய தகுதி எனக்கு இப்பதான் வந்தது. இது தான் காரணம், அப்படீன்னாரு, தாயும் குழந்தையும் கை கூப்பி சாமியை வணங்கி விடைபெற்றனர். எனவே, பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நம்மை, தகுதி படுத்திக் கொள்வோமே, சொல்லும் செயலும் ஒன்றானால், புகழ் கூடும்

மாவீரர்கள்