Sanskathi
May 15

றிச்மண்ட் ஹில் பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு: தந்தையும் மகனும் கைது

றிச்மண்ட் ஹில் பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு: தந்தையும் மகனும் கைது

றிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வெடி மருந்து மற்றும் வெடிப்பி ஆகியற்றைக் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ள யோர்க் பிராந்திய காவல்துறையினர், றிச்மண்ட் ஹில்லைச் சேர்ந்த தந்தை ஒருவரையும் மகனையும் கைது செய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி குறித்த அந்த சந்தேக நபர்கள் அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளாலும், கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அடுத்த நாள் Larratt Lane பகுதியில் உள்ள குறித்த அநத வீட்டில் திடீர் சோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டதாகவும், அதன்போது அருகே உள்ள வீடுகளில் உள்ளோர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குறித்த ஒரு தொகை வெடிமருந்து மற்றும் வெடிப்பி ஆகியவற்றை ஒன்ராறியோ மாநில காவல்துறையினரும், யோர்க் பிராந்திய காவல்துறையினரும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டு ஆண்களைக் கைது செய்த அதிகாரிகள், அவர்கள் மீது வெடிப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 47 வயதான றேசா மொஹமடியாசல் மற்றும் அவரது மகனான 18 வயதான மஹ்யார் மொஹமடியாசல் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சர், இந்த கைது நடவடிக்கை மற்றும் வெடிப்பொருட்கள் மீட்பில், “தேசிய பாதுகாப்பில் பிரச்சினைகள் எவையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.