Sanskathi
May 15

தினகரன் மூலம் ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் முயற்சி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தினகரன் மூலம் ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் முயற்சி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தற்போது சட்டமன்றத்தில் 88 தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாரும் என்னைச் சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. அவ்வாறு இருக்கையில் அந்த தொகுதிக்கு அவர்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்தப் பகுதிக்கு நன்மை செய்வார் என்பதை அறிந்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். தி.மு.க. பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பி அதன் மூலம் வாக்குகளை பெற நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது.

டி.டி.வி.தினகரன் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அம்மாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, 10 ஆண்டு காலம் ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஆனால், அவர் தற்போது புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து, ஏதோ மக்கள் செல்வாக்கு இருப்பது போல காட்டிக் கொண்டிருக்கிறார். எந்த சின்னத்தில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ, அந்த சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் பல்வேறு வகையில் அவர் சதி செய்தார் ஆனால், அது நடைபெறவில்லை.

18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அ.தி.மு.கவில் இருந்து பிரித்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய காரணமாக இருந்தவர் தினகரன். கட்சிக்கு துரோகம் செய்த தினகரன் இந்த தேர்தலோடு விரட்டியடிக்கப்பட வேண்டும். தி.மு.கவும், அ.ம.மு.கவும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

ஒரு தலைவர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடம் பேசும் போது மக்களுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வர முடியும், எவ்வாறு நன்மை செய்ய முடியும் என்பதை பேசாமல். நான் அழகாக இருக்கிறேன், தேர்தல் சுற்றுப் பயணம் மேற் கொண்டதால் தற்போது கறுத்து விட்டேன் என ஸ்டாலின் பேசுவது தலைமைப் பண்புக்கு அழகா? எம்.ஜி.ஆர் கூட தன்னைப் பற்றி பேசியது கிடையாது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார். ஆனால் தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்து பேசுகிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. ஏற்கனவே மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. அதன் முடிவு வருகின்ற 23-ம் தேதி அனைவருக்கும் தெரிய வரும்.

இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்பட்டு வருகிறது. நகர்புறங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டறிய சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குற்றம் இல்லாத ஒரு மாநிலமாக தமிழகத்தை நிச்சயம் உருவாக்கிக் காட்டுவோம். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தின் காரணமாகவே பல்வேறு யுக்திகளைக் கையாண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அது மட்டுமல்ல அ.தி.மு.கவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், கழகத்தின் கொறடா சம்மந்தப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ஆதாரத்துடன் புகார் மனு வினை சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்தார். புகார் மனு கொடுத்த உடனே ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சட்டப் பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்கள். இதிலிருந்தே நன்றாக தெரிகின்றது. தி.மு.கவிற்கும் சம்மந்தப்பட்ட இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தி.மு.க. தலைவருக்கும் சம்மந்தப்பட்ட இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்ன தொடர்பு? எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கழக கொறடா புகார் மனு அளிக்கின்றார் அதற்கு தி.மு.க. தலைவர் ஏன் கொதிக்கின்றார்? ஏன் ஆதங்கப்படுகின்றார்? இதிலிருந்து உண்மை வெளிப்பட்டிருக்கின்றது. தி.மு.கவிற்கும் அ.ம.மு.கவிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு டி.டி.வி.தினகரன் மூலமாக ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது. மக்கள் தான் நீதிபதிகள் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும் அந்த வகையில் 22 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.