Sanskathi
May 24

விடுதலை புலிகளுடனான யுத்த காலத்தில் கூட கல்விக்கு பாரிய பங்களிப்பை வழங்கினோம் – சுசில்

விடுதலை புலிகளுடனான யுத்த காலத்தில் கூட கல்விக்கு பாரிய பங்களிப்பை வழங்கினோம் – சுசில்

விடுதலை புலிகளுடனான யுத்த காலத்தில் கூட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அவர்களுக்கான கல்வி செயற்பாட்டினை முன்னெடுக்க பூரண ஆதரவினை வழங்கினோம் என நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒருமாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கான கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க நாம் பல செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

குறிப்பாக அவர்களுக்கு முகாம்களில் கல்வியை பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளை செய்தோம். ஆனால் அவர்களுக்கு வெள்ளை உடையினை வழங்க எம்மால் முடியாமல் போனது. அவர்களுக்கு சாம்பல் நிற உடையினை மட்டுமே வழங்கியிருந்தோம்.

ஆனால் கல்வி நடவடிக்கையில் தடை ஏற்படுத்தவில்லை. அத்தோடு பலர் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் பரீட்சைக்கு சென்றார்கள். ஆனால் இன்று இந்த கல்வி அமைச்சர் தனது புகைப்படத்தினை பாட புத்தகத்தில் பதித்துள்ளார். இது எவ்வளவு கீழ்த்தரமான செயற்பாடு.

மேலும் கடந்த அரசாங்கத்தில் நாம் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை உடன் நாடாளுமன்றில் சமர்ப்பித்தோம். ஆனால் இன்று இந்த அரசாங்கம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு அதனுடன் கைது செய்யப்பட்டவர்கள், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக எந்த அறிக்கையையும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் எவ்வாறு நாட்டில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கப் போகின்றார்கள்? சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.

நாடே இருளில் மூழ்கி இருக்கின்றது, இந்நிலையில் இந்த அரசாங்கம் நாட்டையும் மக்களையும் இந்த இருளில் இருந்து விலக்கி பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். மேலும் அவசரகால நிலையினை மேலும் நீடிக்க எமது ஆதரவு முழுமையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.