Sanskathi
Jun 19

மக்களின் 30 வருட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

மக்களின் 30 வருட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரிய மக்களின் 30 வருட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் செயலாளர், பிரம்மஸ்ரீ.கே.சந்திரசேகர சர்மா ஆகியோரினால் இன்று (புதன்கிழமை) விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரி 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் சர்வ மதத் தலைவர்கள் மற்றும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 1993 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி உப பிரதேசங்கள் இந்நாட்டில் உருவாக்கப்பட்டன.  அதில் 28 தேசங்கள் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

எனினும், கல்முனை பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாமல் உள்ளது. தமிழ் மக்களின் 30 வருடகால நெடுநாள் கோரிக்கையே இன்று உண்ணாவிரதமாக பரிணமித்துள்ளது.

காலந்தோறும் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடம் இது தொடர்பாக, பல கோரிக்கைகள் முன்வைத்த போதும், எந்தவித பயனுமற்று நம்பிக்கை இழந்து இறுதியில் மக்கள் அறப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். எனவே, இவை தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாக உள்ளது.

ஆகையினால், கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்த வேண்டுமென இந்து குருமார் அமைப்பும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் உடனடியாக உரிய தீர்வினை வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரர்கள்