Sanskathi
Dec 25

கனடியத் தமிழர் பேரவை, தனது பதினோராவது பொங்கல் விழா

அன்பான கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர்களே, ஆதரவாளர்களே, நண்பர்களே,

கனடியத் தமிழர் பேரவை, தனது பதினோராவது பொங்கல் விழா இரா விருந்தை வருகின்ற சனவரி 20, 2018 அன்று பெருமையுடன் நடத்துகின்றது.

இத்தருணத்தில் கனடியத் தமிழர் பேரவையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறுச் செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. அதைப்பற்றிய உண்மைத் தகவலை உங்களுக்கு அறிவிக்கவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.

கனடியத் தமிழர்களின் அருமை பெருமைகளை தமிழரல்லாதவர்களும், குறிப்பாக கனடிய அரசியல்வாதிகளும் அறியும் வகையில் பொங்கல் விழாவை கடந்த பத்தாண்டுகளாக கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கொண்டாடி வருகின்றது.

சிறிலங்காவில் இயங்கும் ரூபவாகினியின் தமிழ்ச்சேவை கனடியத் தமிழர் பேரவையின் பொங்கல் விழாவை ஒளிபரப்ப அனுமதி கோரியிருந்தது. நாம் ரூபவாகினித் தமிழ்ச் சேவைக்கு, ஏனைய ஊடகங்களுக்கு அளித்த அனுமதியை அவர்களுக்கும் வழங்கமுடியும் என்று கூறினோம். எமது இரா விருந்தை ஒளிபரப்புச் செய்ய எந்த ஊடகத்துக்கும் நாம் பொருளுதவி வழங்கவில்லை.

கனடியத் தமிழர் பேரவை உலகெங்கும் உள்ள ஊடகங்களின் உரிமைக்காகவும், சுதந்திரதிற்காகவும் குரல்கொடுத்து வருகின்றது. அந்தவகையில், எமது முடிவுகள் கனடியத் தமிழர் பேரவையின் மையக்கொள்கையை என்றும் பிரதிபலிக்கும்.

மேலும், ரூபவாகினியின் தமிழ்ச் சேவையைப் பார்ப்பவர்கள் சிறிலங்காவில் வதியும் தமிழர்களே. இவ்வொளிபரப்பு நிகழுமேயானால், எமது தாயகத்தில் வாழும் எம்முறவுகளால் கனடிய மண்ணில் வாழும் தமது சகோதர, சகோதரிகளது சாதனைகளை சில பொழுதுகளேனும் பகிர்ந்துகொள்ள முடியும். அத்தோடு, அனைத்துலக மட்டத்தில் தமது உறவுகள் பக்கபலமாகத் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வார்கள்.

தமிழர்கள், குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வை எட்ட வேண்டுமெனில் கலந்துரையாடல் இன்றியமையாதது. சனவரி 2015 இல் சிறிலங்கா வாழ் தமிழ் பேசும் மக்கள் சனநாயக ரீதியாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மைத்திரிபால சிறிசேனாவை சனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர், அனைத்துலக சமூகம் இதற்கு உறுதுணையாக இருந்தது. கனடியத் தமிழர் பேரவையும், ஆட்சிமாற்றத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பை ஊக்குவித்ததோடு, புதிய ஆட்சி மாற்றத்தையும் வரவேற்றிருந்தது.

ஆட்சிமாற்றத்தின் பின், கனடியத் தமிழர் பேரவை, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வை எட்டும் நோக்கோடு அரச பிரமுகர்கள், தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகத்தினருடன் கலந்துரையாடலை நடத்திவருகின்றது. அத்தோடு, கடந்த மூன்றாண்டுகளாக, நீள்நடையில் சேர்த்த நிதி மூலம், சம்பூரில் போரினால் பாதிக்கப்பட்ட 41 பெண்கள் தலைமைதாங்கும் குடும்பகளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தையும், வேலைவாய்ப்பையும் மையமாகக் கொண்டு பண்ணையை உருவாக்கி வருகின்றது. வடக்கு-கிழக்கில் இடம்பெறும் செயற்றிட்டங்களை ஒருங்கிணைக்க North East Economic Development (NEED) Center எனும் மையத்தை உருவாக்கியுள்ளது.

வடக்கு-கிழங்கு வாழ் தமிழ் மக்களின் கல்வி-சுகாதார மேம்பாட்டை மையமாகக் கொண்டு ஒர் அனைத்துலக ஆய்வரங்கை நடத்தியிருந்தது, இதற்கு சிறிலங்காவில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபடும் தமிழ் அரச பிரதிநிதிகள், தமிழ் அரச அதிகாரிகள் என 28 பேரை வரவழைத்திருந்தது. இதன் தொடராகவும், பல செயற்றிட்டங்கள் தாயகத்தில் நடைபெறுகின்றன.

இத்தைப்பொங்கல் இரா விருந்தில், தமிழர்களின் நன்றியறிவித்தலைத் தெரிவிக்கும் முகமாக பல முக்கிய பிரமுகர்களை, அமைப்புகளைக் கௌரவித்து வருகின்றோம். இங்கு அத்தகைய இரண்டைக் குறிப்பிடுகின்றோம். ஒன்று, உலக அரங்கில், தமிழர் நீதிக்காக குரல்கொடுத்துவரும், Sri Lanka Campaign for Peace and Justice எனும் அமைப்பு. அடுத்தது, சிறிலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கும், குண்டுவெடிப்புக்கும் முகங்கொடுத்து 1983 முதல் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டி யாழ்ப்பாணத்தில் மையங்கொண்டு இயங்கிவரும் உதயன் செய்தியிதழ்.

கனடியத் தமிழர் பேரவை, தமிழர் தொடர்பான பிரச்சனைகளில், ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துடனும், அனைத்துலக சமூகத்துடனும் நேரடியாகவும், உலகத் தமிழர் பேரவையின் கனடிய பிரதிநிதியாகவும் ஈடுபட்டுவருகின்றது.

கனடியத் தமிழர் பேரவை தொடர்ந்தும், போரினால் பாதிக்கப்பட்டப் மக்களின் மேம்பாட்டிற்காக இயற்றப்பட்ட தீர்மானம் 30/1ஐ நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. அத்தோடு, வடக்கு-கிழக்கு வாழ் எம் உறவுகளின் வாழ்வாதார, சமூக, வணிக மேம்பாட்டிற்கான செயற்றிட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது.

இது தொடர்பான கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்: 647-300 1973 / dantont@canadiantamilcongress.ca.

உங்கள் அனைவருக்கும் நலமும், மகிழ்ச்சியும் நிறைந்த விடுமுறைகால, புத்தாண்டு வாழ்த்துகள்.

உண்மையுள்ள,

டன்ரன் துரைராஜா

நிறைவேற்று இயக்குநர்

கனடியத் தமிழர் பேரவை


மாவீரர்கள்