Sanskathi
Jan 07

மார்க்கம் தைப் பொங்கல் விழா

தமிழ் மரபியல் பண்பாட்டு மையம் மார்க்கம் மாநகர சபையுடனும் மற்றும் பல சமூக நிறுவனங்களுடனும் இணைந்து நடாத்தும் எட்டாவது மார்க்கம் தைப் பொங்கல் விழா இரு நாட்கள் விழாவாக நடைபெறுகின்றது.  சனவரி 12 (சனி), சனவரி 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முறையே மார்க்கம் மாநகர சபை  மற்றும் மார்க்கம் அரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.  12 சனி அன்று மார்க்கம் மாநகர சபையில் நடைபெறும் தமிழ் விழாவில் - தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளும், பட்டறைகளும் தமிழ் மரபு பற்றிய கண்காட்சியும், தமிழ்மொழி கற்பித்தல் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெறும். 13 ஞாயிறு அன்று மார்க்கம் அரங்கில் நடை பெறும் கலை விழாவில் சிறுவர், இளையோர், முதியோர் ஆகியோரது அரங்க கலை நிகழ்வுகள் இடம் பெறுகின்றது. இந்நிகழ்வுக்கு பல்லின மக்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள். அனுமதி இலவசம்.

பல்லினத்தன்மையை மதித்தும் அதேவேளை மக்களை ஓரணியில் அணைத்துச் செல்வதில் மார்க்கம் மாநகரசப எப்போதும் முன்னிலை வகிக்கின்றது. எம் எல்லோருக்கும் தெரிந்ததைப் போல 2011 மார்கழியில் தை பொங்கல் திருநாளை தமிழர்களாது மரபியல் நாளாக முதன்முதலில் பிரகடனப் படுத்தியது மார்க்கம் மாநகரசபையே ஆகும். மதிப்பிற்குரிய திரு. லோகன் கணபதி அவர்களின் பெரு முயற்சியினை நினைவுகூருகின்றோம். 2012 தை மாதத்திலிருந்து மார்க்கம் தைப்பொஙல் குழுவானது தைப்பொங்கல் விழாவினை மார்க்கம் மாநகர சபையின் அனுசரணையுடனும், திரு லோகன் கணபதியின் வழிகாட்டலுடனும் பெருவிழாவாக கொண்டாடி வருகின்றது.

இந்த ஆண்டில் தமிழ் மரபியல் பண்பாட்டு மையமானது பல்வேறு நிறுவனங்களோடு இவ்விழவுடன் ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. அத்தோடு இவ்விழாவினை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் விழாவாக கட்டமைப்பதற்கு மார்க்கம் மாநகரசபையுடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்து செயற்படுகின்றது.

இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவானது 300இற்கும் மேற்பட்ட இளம் தலைமுறயினராலும் மூத்தோர் அமைப்புக்களினாலும், தமிழ் மொழிக் கல்விநிலையங்களினாலும், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களினாலும் பங்களிப்புச் செய்யப்பட்டு மார்க்கத்தில் மட்டுமன்றி ரொறொன்றோ பெரும்பாக்கத்திலும் கொண்டாடப்படும் முக்கிய தமிழ் விழாவக விளங்குகின்றது.

தைப் பொங்கல் விழாவானது தமிழர்கள் நன்றி செலுத்தும் விழாவாகும்.  2000 வருடகால மரபினைக் கொண்ட தைப் பொங்கல் விழா, வாழ்வாதாரங்களை வழங்கும் இயற்கை வளங்களிற்கு, குறிப்பாக சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தும் தனித் தன்மை கொண்ட விழாவாகும். 

இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் மார்க்கம் தைப் பொங்கல் விழாவானது தமிழ்க் கலச்சாரம், மரபுகள், வரலாறு, இலக்கியம், கொண்டாட்டங்கள் பற்றிய விடயங்களை, அவற்றின் பெறுமானங்களை இளம் தலைமுறைத் தமிழர்களும் கனேடிய மக்களும் புரிந்து கொள்ளவும் கொண்டாடவும் வழி செய்வதோடு பெருமைக்குரிய தமிழ்க் கலாச்சார மரபுகளை தெரிந்து கொள்ளவதற்கும் பாதுகாப்பதற்கும் சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது. தமிழின் கலாச்சார மரபுகளையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் பற்றிய கல்வியினை இளம் சந்ததியினர்க்கு வழங்குவதும் தமிழர்களது தலையாய கடமையாகும்.