13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ; ஆளுக்கொரு நிலைப்பாட்டிலிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள்!
தென்னிலங்கை அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் தீர்வுகளுக்கு முடிவே இருக்காது.

நல்லிணக்கம், இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வு என்பவற்றோடு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் தமிழரின் வாக்குகளிற்கான பொன்பூச்சு!
தேர்தல் அண்மிக்கும் காலங்களில் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கான கால கட்டத்தில் தத்தமது தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளை விடஇ வேட்பாளர்களால் வாக்குறுதிகள் அள்ளி இறைக்கப்படும்.
அதுவும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலும், மலையகத்திலும் காலம் காலமாக தீர்க்கப்படாமலுள்ள பிரச்சினைகளுக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் தீர்வுகளுக்கு முடிவே இருக்காது. வடக்கு அல்லது கிழக்கிற்கு சென்றால் நல்லிணக்கம், இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வு என்பவற்றோடு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் உள்வாங்கப்படும்.
அதே போன்று மலையகப் பக்கம் சென்றால் ஒவ்வொரு தேர்தலுக்கும் வழங்கப்படும் வாக்குறுதிகளில் மாத்திரம் சம்பள அதிகரிப்பு வார்த்தைகளால் வழங்கப்படும்.சஜித் பிரேமதாச
அந்த வகையில் தற்போது செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் இடம்பெறும் என்று நம்பப்படுகின்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பேசுபொருளாக்கிவிட்டிருக்கின்றார்.
கடந்த 9ஆம் திகதி வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர், கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, ‘அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம்.
13ஆவது திருத்தம் என்பது எமது அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒன்றாகும். எனவே ஏனைய அரசியல் தலைவர்கள் நேரத்துக்கேற்றாற்போல் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கூறும் கதைகளைப் போன்றல்லாமல், 13ஐ நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் ஒரு கால கட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டவர்கள் கழுகு போல் காத்திருப்பார்;கள்.
உதய கம்மன்பில
அந்த வகையில் சஜித் இவ்வாறானதொரு கருத்தினை வெளியிட்ட மறுகணமே பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில இரண்டு பக்க அறிக்கையொன்றை வெளியிட்டார்.
‘13ஐ பற்றிய முழுமையான புரிதல் இல்லாதவர்களே அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வருவார்கள்.” என்று தலைப்பிட்டு அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி விரும்பினால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளதோடு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் மற்றும் சவால்கள் குறித்தும் தனது பார்வையில் எடுத்துரைத்துள்ளார்.
அது மாத்திரமின்றி எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சஜித் பிரேமதாச அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
கம்மன்பிலவின் இந்த அறிக்கையுடன் நின்று விடாமல் 13 குறித்த நிலைப்பாடுகள் நாலா புறங்களிலிருந்தும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
டக்ளஸ் தேவானந்தா,
அந்தவகையில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா, சஜித்தின் மேலோட்டமான கருத்தினை நேரடியாகவே விமர்த்திருக்கின்றார்.
சஜித்தின் கூற்று தொடர்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ், ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அதனை எந்தெந்த அதிகாரங்களுடன் எவ்வாறு அமுல்படுத்துவார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இந்த விடயத்தில் நழுவல் போக்கிலேயே அவர் செயற்பட்டிருக்கின்றார். மூக்கினாலா சாப்பிட்டீர்கள் என்று கேட்க, இல்லை கொஞ்சம் கீழே வாயால் சாப்பிட்டேன் என்று பதிலளிப்பதைப் போலதான் சஜித்தின் கதை இருக்கிறது.” என்று நக்கலாகக் குறிப்பிட்டிருந்தார்.
சஜித் இவ்வாறு கூறிய போதே சற்று ஆழமாகக் கேள்வியெழுப்பியிருந்தால், அவரின் உண்மை நிலைப்பாட்டை தெள்ளத்தெளிவாக அறிந்து கொண்டிருக்க முடியும் என்பது டக்ளஸின் நிலைப்பாடு.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், சஜித்;தின் கூறிய கருத்து தொடர்பில் வழங்கிய விளக்கமானது ஒரு விதத்தில் டக்ளஸ் கூறியது உண்மைதான் போலும் என்றவாறு அமைந்திருந்தது.
‘13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூக மற்றும் சுற்றாடல் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அதனையே குறிப்பிட்டிருந்தார். மாறாக பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என அவர் கூறவில்லை.” என்று மரிக்கார் விளக்கமளித்தார்.
எரான் விக்கிரமரத்ன
ஆனால் கடந்த 12ஆம் திகதி யாழில் ஊடக மாநாடொன்றை நடத்திய எரான் விக்கிரமரத்ன எம்.பி., ‘பொலிஸ், காணி அதிகாரங்களை நாம் நடைமுறைப்படுத்துவோம். நாட்டிலுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்வோம்.” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதே போன்று அதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான லக்ஷ்மன் கிரியெல்ல வீரகேசரிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி வழங்கிய நேர்காணலில் 13ஐ முழமையாக நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் உள்ளோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் ஒரு நிலைப்பாட்டிலும், ஏனைய ஒவ்வொரு எம்.பி.க்களும் ஆளுக்கொரு நிலைப்பாட்டிலும் உள்ளனர்.
13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தல் என்பது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு விடயம் மாத்திரமே என்பது இவ்வாறான சந்தர்ப்பங்களில் தெளிவாகிறது.
பிரதான எதிர்க்கட்சியின் நிலை இவ்வாறிருக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி.) அநுரகுமார திஸாநாயக்க வடக்கு சென்றிருந்த போது, அவரிடமும் இது குறித்த கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள மாகாணசபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மறுபுறம் வழமை போன்று விமல் வீரவன்ச தரப்பும், சம்பிக ரணவக்கவும் இதற்கு எதிர்ப்பினையே வெளியிட்டிருந்தனர்.
கட்சி ரீதியில் இவ்வாறு மாறுபட்ட கருத்துக்கள் காலத்துக்கு காலம் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக சர்வகட்சி மாநாடொன்று கூட்டப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க,
இதன் போது 13ஆவது திருத்தம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘ நாட்டில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் கட்டளைச் சட்டம் பயனற்றதாகக் காணப்படுவதால் , அதில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய சட்டமொன்றை கொண்டுவர வேண்டியதன் அவசியமாகும்.
பொலிஸ் அதிகாரங்களை எவ்வாறு அமுல்படுத்தலாம் என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்.
அதற்கமைய பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்ட பின்னர் அதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
அது மாத்திரமின்றி பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்ட பின்னர் அதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் , அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய காலத்தில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே ஜனாதிபதி பதவியை நான் ஏற்றுக்கொண்டேன்.
அதனால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா அல்லது அதனை முழுமையாக நீக்குவதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இந்த சர்வகட்சி மாநாட்டின் போது அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார்.
அத்தோடு இது தொடர்பான பரிந்துரைகளை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கட்சிகளிடம் கோரியிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக அவ்வப்போது தலைதூக்கும் ஒரு பேசுபொருளாக மாத்திரமே இந்த விவகாரம் இன்றுவரை காணப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காணும் வரை இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியே இருக்காது என்பதே யதார்த்தம்.