பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள்! – அதிபர் மக்ரோனுக்கு சிக்கல்?
தேர்தலில் 50% வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். யாருக்கும் 50% கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது சுற்றுத் தேர்தல்!

பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. பிரான்ஸைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறை நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகளால் தற்போதைய அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது.
காரணம் இப்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 577 உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்.
ஆனால் அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபருக்கான அதிகாரம் குறையும். புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் அதிபருக்கு சிக்கல்கள் ஏற்படலாம், எனவே தான் இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மூன்று வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்தார். அதன் பிறகு தான் முதல் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
தீவிர வலதுசாரிகளின் கட்சி, இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் பிரான்ஸ் அதிபரின் மையவாதக் கூட்டணி என இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. நடந்து முடிந்த முதல் சுற்றுத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் கட்சி முன்னிலைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
முதல் சுற்றுத் தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். அடுத்த சுற்று வாக்குப்பதிவு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும்.
முன்னிலைப் பெற்ற தீவிர வலதுசாரிகள் மரைன் லே பென்னின் தீவிர வலதுசாரிக் கட்சியின் 39 எம்.பி-க்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளிலும் தீவிர வலதுசாரிகளின் கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்- National Rally) முன்னிலையில் இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் இடதுசாரிகளின் கூட்டணியும், அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாதக் கூட்டணி மூன்றாம் இடத்திலும் இருந்தன.
இதையே பிரதிபலிக்கும் விதமாக, தீவிர வலதுசாரிகளின் கட்சி 33.2% வாக்குகளுடன் முன்னிலையிலும், இடதுசாரிகளின் கூட்டணி 28.1% பெற்று இரண்டாம் இடத்திலும், அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கூட்டணி 21% வாக்குகளுடன் பின்தங்கியும் உள்ளது.
இது தொடர்பாக பேசிய தீவிர வலதுசாரிகள் கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா, “பிரெஞ்சுக் குடிமக்கள் தங்கள் வாக்குகளை எங்களுக்கு வழங்கினால், அனைத்து பிரெஞ்சு மக்களுக்கான பிரதமராக நான் இருப்பேன்.” என்று கூறினார். 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா, தேசிய பேரணிக் கட்சியின் முக்கியத் தலைவரான மரைன் லே பென்னின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார்.
“பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகளின் இதற்கு முன் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தேர்தல்” என்கிறார் பிரான்ஸ் அரசியலின் மூத்த விமர்சகர் அலைன் டுஹாமெல்.
ஆனால் தீவிர வலதுசாரிகள் இன்னும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. 577 உறுப்பினர்கள் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 289 இடங்களைப் பெற வேண்டும். இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கு பிறகு தான் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது முழுமையாக தெரிய வரும்.
ஏற்கெனவே முதல் சுற்றுக்குப் பிறகு, 39 தேசிய பேரணிக் கட்சியின் எம்.பி.க்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அதே போல இடதுசாரிகளின் கூட்டணியிலிருந்தும் 32 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நடக்கும் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள், ஆனால் பிரான்ஸ் தேர்தலில் 50% வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
யாருக்கும் 50% கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறும். முதல் சுற்றுத் தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்வார்கள்.
முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்?
கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி, அதிபர் எமானுவேல் மக்ரோங், பிரான்ஸ் நாட்டில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தொலைக்காட்சி செய்தியில் தெரிவித்திருந்தார்.
அவரது திடீர் அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக, ஐரோப்பிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதில் பிரான்சும் பங்கேற்றது. அந்தத் தேர்தலில், மக்ரோனின் மையவாதக் கூட்டணியை விட, தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய பேரணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
இதைச் சுட்டிக்காட்டி, “எதுவும் நடக்காதது போல் என்னால் இருக்க முடியாது, எனவே பிரான்ஸ் தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று எமானுவேல் மக்ரோங் கூறினார்.
இந்தத் தேர்தல்கள் நாடாளுமன்றத்துக்காக நடத்தப்படுவதால், மக்ரோனின் பதவிக்காலம் பாதிக்கப்படாது. அவரது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன.
முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்ற மக்ரோனின் அறிவிப்பு தங்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று பல பிரான்ஸ் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில் மக்ரோனுக்கும் வேறு வழியில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் எமானுவேல் மக்ரோங் முழுப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதால், புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எமானுவேல் மக்ரோங்கின் புகழ் சமீப காலங்களில் குறைந்துவிட்டது. முன்கூட்டியே தேர்தலை நடத்துவதன் மூலம் குறைந்தபட்சம் தனது கூட்டணிக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என அவர் நம்புகிறார்.
பிரான்ஸ் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை தான் மதிப்பதாகவும், ஒருவேளை தீவிர வலதுசாரியான தேசிய பேரணிக்கு அரசை அமைப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டுமென மக்கள் விரும்பினாலும் கூட அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் தேர்தல்கள் ஏன் முக்கியமானவை?
தேசிய பேரணிக் கட்சி (வலதுசாரி) வெற்றி பெற்றால் 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா பிரதமராக பதவியேற்பார்
பிபிசி செய்தியாளர் ஹுவ் ஸ்கோஃபீல்ட் கூறுகையில், “இந்தத் தேர்தல் பிரான்ஸுக்கு மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவுக்கும் ஒரு வரலாற்று திருப்புமுனையாக இருக்கக்கூடும்” என்கிறார்.
பிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில், கடுமையான யூத-விரோத சித்தாந்தம் கொண்ட தீவிர வலதுசாரிகளின் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது சில காலத்திற்கு முன்பு வரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.
ஒருவகையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்ட சூழலில் இருந்து இந்த நாடு வெளியேறத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கலாம்.
பாசிசம், பழமைவாதம், தேசியவாதம் மற்றும் குடியரசு முன்னணி போன்ற அரசியல் சொற்கள் தேர்தல் விவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தம் குறைந்து வருகிறது.
“தேசியப் பேரணி போன்ற ஒரு பிரபலமான வலதுசாரிக் கட்சிக்கு வாக்களிப்பது ஏன் சங்கடத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் இது விளக்குகிறது” என்று ஹூவ் ஸ்கோஃபீல்ட் கூறுகிறார்.
பிரான்ஸ் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது, பிரான்ஸ் தேர்தலில் பல கட்சிகள் களம் காண்கின்றன. ஆனால் முக்கியமான போட்டி என்பது மூன்று கூட்டணிகள் இடையே தான்.
தேசிய பேரணி (ஆர்என்-National Assembly, RN )
இது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகும். சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் இந்தக் கட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டது.
சமீப காலங்களில், யூத-எதிர்ப்பு மற்றும் தீவிரவாத அரசியல் கொள்கைகளை ஆதரிக்கும் அதன் அடிப்படை சித்தாந்தத்தில் இருந்து இந்தக் கூட்டணி விலகி இருந்தாலும், அது குடியேற்றத்தை கடுமையாக எதிர்க்கிறது.
பிறநாட்டு குடிமக்கள் பிரான்ஸில் குழந்தைப் பெற்றால், அக்குழந்தைக்கு தானாகவே கிடைக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை தேசிய பேரணிக் கட்சி ஆட்சியைப் பிடித்தால் வழங்கப்படாது.
28 வயதான ஜோர்டான் பர்டெல்லா தலைமையிலான அக்கட்சி வெற்றி பெற்றால், பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி -The Popular Fron
தற்போது, சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி தேர்தலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் தீவிர வலதுசாரிகளை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்துள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தங்களை மாற்றியமைக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான மீட்பு நிறுவனத்தை உருவாக்கவும் இக்கூட்டணி விரும்புகிறது.
மையவாதக் கூட்டணி
பிரான்ஸ் மக்கள் வலதுசாரி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டும் சூழ்நிலையில், மையவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன.
ஆனால் இந்த கூட்டணியின் சில வேட்பாளர்கள் தேர்தலில் இரண்டாம் சுற்றை எட்டாமல் போகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரான்சில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது?
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு (Assemblée Nationale) பிரதிநிதிகள் என அழைக்கப்படும் 577 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.
ஆட்சி அமைக்க அல்லது நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற 289 இடங்கள் தேவை. முதல் சுற்றில் 12.5 சதவீத வாக்குகளைப் பெற முடியாத வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றாலோ அல்லது தனது தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் நான்கில் ஒரு பங்கையாவது பெற்றாலோ வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். இருப்பினும், இது மிகவும் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே நிகழ்கிறது.
பிரான்சில், அதிபர் மற்றும் பிரதமர் என இருவரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்களைக் கையாளுகின்றனர். பிரதமர் அரசாங்கத்தின் தலைவர், அதிபர் நாட்டின் தலைவர்.
பிரான்சில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல், அதிபர் தேர்தல் முடிந்த உடனேயே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 2027இல் நடைபெற வேண்டியது. ஆனால் இந்த ஆண்டே தேர்தலை நடத்த எமானுவேல் மக்ரோங் முடிவு செய்தார்.