“கடும் போக்கு சிந்தனை என்பது உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியுள்ளது.
“இது சிங்களவர்களுக்கு மட்டுமான நாடு” - ஏன் இந்த கடும் போக்குச் சிந்தனை?

“இது சிங்களவர்களுக்கு மட்டுமான நாடு”: ஏன் இந்த கடும் போக்குச் சிந்தனை?
இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல, கடும் போக்கு சிந்தனைகளே இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போருக்கு பிரதான காரணமாகும்.
அதன் வடுக்கள் இன்றளவிலும் காணப்படும் நிலையில், இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த கடும் போக்கு சிந்தனைகளே பிரதான காரணம் என்று கூட கூறலாம்.
இலங்கை என்பது பல்லின கலாசாரத்தை கொண்ட நாடாகும். இங்கு தமிழ், சிங்களம் மற்றும் இஸ்லாமியர்கள் என மூன்று சமூக மக்களும் வாழுகின்றனர்.எனினும், இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமான நாடு என தென்னிலங்கையின் பிரதான அரசியல் வாதிகளும், பௌத்த மதத் தலைவர்களும் வாதிட்டு வருகின்றனர்.இதன் காரணமாகவே தமிழ் மக்களுக்கான உரிமைகளை தர சிங்கள அரசியல் தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.இந்த கடும் போக்கு சிந்தனை என்பது அரசியலில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும் ஊடுறுவியுள்ளது. ஏன் பொது இடங்களிலும் வெளிப்படையாக காட்டப்படுகின்றது.இந்த கடும் போக்கு சிந்தனைகளே இன்று வடக்கு கிழக்கில் உள்ள வழிபாட்டு தளங்களையும் ஆக்கிரமிக்க செய்துள்ளது என்றே கூறமுடியும்.
இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான சமூக நல்லிணக்கம் என்ற கருத்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. சமூக நல்லிணக்கம் என்பது வேறுபட்ட குழுக்களுடன் முரண்பாடுகள் இன்றி இணங்கி வாழ்வதாகும்.
எனினும் யுத்தத்திற்கு பின்னர் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது சவாலான ஒன்றாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த கடும் போக்கு சிந்தனைகள் ஆகும்.அரசியல் வாதிகளும், மதத் தலைவர்களும் வெளிப்படையாகவே தங்களின் கடும் போக்கு சிந்தனையை மக்கள் மத்தியில் விதைக்கின்றனர்.அந்த சிந்தனைகளால் ஈர்க்கப்படும் பொது மக்களும் தமது எண்ணங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர். இதனை தலைநகர் கொழும்பில் பயணிக்கும் வாகனங்களில் பரவலாக காணமுடிகின்றது
“இது சிங்கள நாடு, சிங்களவர்களின் இரத்தம், சிங்களவர்களுக்கு மட்டுமான நாடு” என்ற கடும் போக்கு சிந்தனைகளை கொண்ட வாசகங்களை வாகனங்களில் எழுதியிருப்பதை காணமுடிகின்றது. நலிவடைந்த பொருளாதாரத்துடன் பயணிக்கும் இலங்கையை அதிலிருந்து மீட்டெடுக்க இந்த கடும் போக்குவாதமும், இனவாதமும் தேவையில்லை என்பதே பலரின் நிலைப்பாடாகும்.