உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித்!
2021 இல் என்னுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டவேளை தெரிவித்த விடயங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுக்க முடியாது
2021 பெப்ரவரியில் கோட்டாபய என்னுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க முடியும்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என கர்தினால் தெரிவித்துள்ளதை கோட்டாபய மறுதலித்துள்ளார்.
2021ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் பேசினார் என்பதை என்னாலும் எனது செயலாளராலும் நிரூபிக்க முடியும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு இஸ்லாமிய குழுக்களை மாத்திரம் தடை செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தது என கோட்டபாய ராஜபக்ச சமீபத்தில் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
எனினும் அந்த அறிக்கை இஸ்லாமிய அமைப்புகள் இல்லாத ஏனைய சில அமைப்புகளையும் தடை செய்யுமாறு தெளிவாக கேட்டுக்கொண்டது முன்னாள் ஜனாதிபதி உண்மைகளை மறைக்க முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த புலனாய்வு பிரிவு அதிகாரிகளை இடம்மாற்றினார் எனவும் தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் தற்போதைய அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டு;ம் என பரிந்துரைத்துள்ள போதிலும் ஏன் அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.