Breaking News
நாயின் குரைப்பும் இசைதான் : இசைஞானி இளையராசா
ஒரு பாடல் உருவாக்கம் என்பது மொழியும் இசையும் சேர்வதுதான்.
3.jpeg)
தேவாரம் - திருவாசகம் பாசுரங்களை அதன் மூலவர்கள் எந்த இசையில் - எந்த இராகத்தில் பாடினார்களோ அறியோம்.
ஆனால் அது இன்று பல்வேறு இராகங்களில் பாடப்படுகிறது. அதுபோலவே பாரதியார்-பாரதிதாசன் பாடல்களும் பல்வேறு பாடகர்களால் - இசைங்கர்களால் பல இராகங்களில் பாடப்படுகிறது. திருக்குறள் புதுத் தலைமுறையினால்- புதுப்புது வடிங்களில் பாடப்படுகிறது. நாயின் குரைப்பும் இசைதான் என இசைஞானி இளையராசா ஒரு நேர்காணலில் கூறியதாக நினைவு.
அதனடிப்படையில் இயற்கை ஓசைகள் இசையாக மொழிக்கு முந்தையை பல லட்சம் அகவைகள் மூத்ததே.மனிதனுக்கும் மூத்தது இசையென்றும் சொல்லலாம். ஆனால் மொழியும் இசையும் பிணையும் போது, காலங்கள் கடந்தபின்பு இசை அதன் வடிவங்களை மாற்றிக்கொள்கிறது.
ஆனால் மொழி அதே வடிவத்திலேயே இருக்கிறது. தேவாரம் - திருவாசகம்-பாசுரங்கள் - சங்கப்பாடல்கள்-சித்தர் பாடல்கள் - வள்ளலார் பாடல்கள் என நீண்ட நெடிய உண்மைகள் இருக்கின்றன. திரைப்பாடல்களில் கூட புகழ்பெற்ற மெட்டுகளில் பாடப்பட்ட "ஹிட்" அடித்த பல பாடல்கள் ஒரே தொகுப்பாக வேறுவேறு மெட்டுகளில் "ரீமிக்ஸ்" என்ற பெயரில் பாடப்படுகிறது.
"புத்தம்புதுக்காலை" முழுப்பாடலும் சமீபத்தில் வந்த திரைப்படத்தில் வேறொரு மெட்டில் பாடப்பட்டது. எம்.எஸ்.வி-கே.வி. மகாதேவன் காலங்களில் ஒரேஒரு பாடலின் வரிகளுக்காக வாரக்கணக்கில்- மாதக்கணக்கில் இசையமைப்பாளர்கள் காத்திருந்ததை அறிகிறோம். மிகச்சிறந்த மெட்டாக இருந்தாலும், பாடல் வரிகள் காட்சிக்கும் பொருளுக்கும் நிறைவுடையதாக இருக்க வேண்டும் என்பதில் அவ்வளவு மெனக்கிட்டார்கள். அதனால்தான் கண்ணதாசன், பட்டுக்கோட்டை, உடுமலை நாராயணகவி, க.மு.செரிப்- கு.மா.பாலசுப்பிரமணியன்- வாலி ஆகியோரின் பாடல் மொழிகள் காலத்தை வென்று காவியத்தன்மை கொண்டதாக இருக்கிறது.
இசைஞானி இளையராசா இசையுலகம் கொண்டாடும் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். அவரின் இசை கோடானுகோடி மக்களை ஈர்த்திருக்கிறது. வாழ்வின் ஒரு அங்கமாக ஆகியிருக்கிறது. அவரின் இசைமேதமை கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஒரு பாடல் உருவாக்கம் என்பது மொழியும் இசையும் சேர்வதுதான். மொழியும் இசையும் முழுமையாக இயைந்து பிறக்கும் பாடல் காலத்திற்கும் நிற்கிறது. திரும்ப திரும்ப கேட்கும் இளையராசாவின் பாடல்களின் மொழி இலக்கியத்தன்மை கொண்டதாக இருக்கும். அத்தகைய பாடல்கள் இளையராசாவோடு வைரமுத்து- அறிவுமதி-பழனி பாரதி போன்றவர்களின் இணைவில் பிறந்தது.
இளையராசாவின் தன் இசைமேதைமையின் மீதான தன்முனைப்பு, மொழியை தாண்டி தன் இசை மட்டுமே பேசப்பட வேண்டும் என்ற நிலையை அவரை எடுக்கத் தூண்டியது. எனவேதான் இலக்கியதன்மை கொண்ட மொழியை தவிர்த்து-வழக்கு சொற்களை கொண்ட மொழியில் அவர் இசைதிரும்பியது.
பயணங்கள் முடிவதில்லை- இராமன்அப்துல்லா-சிறைச்சாலை போன்ற படங்களின் மொழியிசையையும், இப்போது ராசாவின் மொழியிசையையும் ஒப்பிட்டு பார்த்தால் தெளியலாம். திரைப்பாடல் என்பது எளிய மக்களை எளிதில் சென்றடைவது. அதை நமது தமிழுலக இசை - பாடல் மேதைகள் ஒரு இலக்கிய தரமான படைப்பாக மக்களுக்கு கொடுத்தனர். அத்தகையதொரு மேம்பட்ட படைப்புகளை மக்களுக்கு கொடுக்கும் ஆற்றல் இளையராசாவிற்கு இருந்தும், அதை தன்னை முன்னிறுத்துவதற்காக இசைஞானி புறந்தள்ளுவது துன்ப நிகழ்வாகும். புதிய இசையமைப்பாளர்களின் இசையில்
உமாமகேஸ்வரி-தாமரை - முத்துக்குமார்-யுகபாரதி போன்றோரின் இலக்கியதரமிக்க மொழி பாடலாக வெளிப்படும்போது இசையோடு சேர்த்து அது தரும் அகவுணர்வு தனித்துவமானது. தன் அன்றாட வாழ்வில் மொழியை இழந்து கொண்டிருக்கும் தமிழனிடம், தனது செழுமையோடும் மரபோடும் புதுமையோடும் திரைப்பாடல்கள் உறவாடிக்கொண்டேயிருக்கிறது. அத்தகைய உறவை இசைஞானி தன் ஆற்றலால் இன்னும் உயிர்ப்பாக்க முடியும். அந்த உயிர்ப்பையே தமிழ்ச் சமூகம் இளையராசாவிடம் கோருகிறது. அந்த உயிர்ப்புதான் அவர் காலம் தாண்டியும் அவரின் அடையாளமாக இருக்கும்.