வடக்கு மக்களின் ஆணையின் அர்த்தத்தை ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளோம் ; அமைச்சர் ஆனந்த விஜயபால!
.

வடக்கு மக்கள் எமக்குப் பெற்றுத் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவையை பெற்றுக் கொடுப்போம்.
அதேபோன்று சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய ஒழுக்கமான சமூகத்தையும் உருவாக்க நாம் முன்னிற்போமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு சென்றிருந்தோம்.
யாழ் உள்ளிட்ட வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தினோம்.
இந்த வேலைத்திட்டத்தில் பொலிஸாருக்கு உள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் என்ன என்பது தொடர்பில் அவதானம் செலுத்தினோம்.
குறிப்பாக கடந்த இரண்டு பிரதான தேர்தலின் போதும் வடக்கு மக்கள் எமக்கு பெற்றுத்தந்த மக்கள் ஆணையின் நோக்கத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். இந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.
அதேபோன்று அந்த மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் வினைத்திறனான பொலிஸ் சேவைப் பெற்றுக் கொடுக்கவும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
மேலும் வடக்கில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு தமிழர்களை உள்ளீர்ப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தினோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் திட்டம் மாத்திரம் அல்ல. நாட்டின் முழு கட்டமைப்பையும் சீரமைக்கும் தேசிய வேலைத்திட்டமாகும்.
அதற்குஅப்பால் சென்று ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்,சட்டத்தின் ஓழுங்கை உறுதிப்படுத்தல், இலஞ்சம், ஊழல், மோசடி, வீண் விரயம் அற்ற நாட்டை கட்டியெழுப்புதல் என்பவையும் இதிலடங்கும்.
இவை அனைத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை மாத்திரம் அல்ல.கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தின் நோக்கமும் கூட.எனவே இந்த இலக்குகளை அடைய பொலிஸாரின் தலையீடு மிக முக்கியமானதாகும்.
இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பொலிஸார் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்ய வேண்டும்.
நிச்சயம் இந்த திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் உலகபாதாளா குழுக்களின் செயற்பாடுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியும்.
எனவே இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் மிகவும் திட்டமிட்ட வகையிலும் நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.