வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைவரங்கள் என்ன?; அறிந்துகொள்வதில் அமெரிக்கா ஆர்வம்.
.

தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரனிடம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்தார்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் கரிசனை உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்துகொண்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அமெரிக்கத்துடன் என்னுடன் கலந்துரையாடி கேட்டறிந்தார். இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள், பொருளாதார முன்னேற்றங்கள் போன்ற விடயங்களையும் கேட்டறிந்துகொண்டார்.
கட்சியின் புதிய செயலாளராக அவர் முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடியதால் இந்த சந்திப்பு முக்கியத்துவமானதாக உள்ளது.
இதேவேளை இந்த சந்திப்புக்கு முன்னர் அவுஸ்திரெலிய தூதுவர், பிரதி தூதுவர் மற்றும் அரசியல் அதிகாரி ஆகியோருடனும் சந்திப்பும் இடம்பெற்றது என்றார்.
இதேவேளை சுமந்திரனுடான சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரனை முதற்தடவையாக சந்தித்தேன். இந்த சந்திப்பில் அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கையில் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.