ஐ.எஸ்., பயங்கரவாத தலைவரை ஈராக்கில் தீர்த்து கட்டிய அமெரிக்கா
''ஈராக்கிற்கும், உலகிற்கும் அச்சுறுத்தலாக இருந்த மிக முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவரான அபு கதீஜா கொல்லப்பட்டார்,'' - ஈராக் பிரதமர் முகமது ஷியா.

ஈராக்கில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு கதீஜாவை, அமெரிக்க ராணுவம் தீர்த்துக் கட்டியது.
மேற்கு ஆசிய நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததையடுத்து, அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையால், கடந்த 2017-ல் ஈராக்கிலும், 2019ல் சிரியாவிலும் அவர்களின் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது. எனினும், இரு நாடுகளின் சில பகுதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ்., கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றின் கவர்னராக அப்துல்லா மக்கி முஸ்லிஹ் அல் ரிபாய் என்ற அபு கதீஜா என்பவர் இருந்தார்.
உலக அளவில் ஐ.எஸ்.ஐ.எஸ்., நடத்தும் தாக்குதல்கள், பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாதிகளை ஒருங்கிணைப்பது என செயல்பட்ட அபு கதீஜா, அந்த அமைப்புக்கு உலக அளவில் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்.
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஈராக்கில், 2,500க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அபு கதீஜாவை தேடப்படும் பயங்கரவாதியாக 2023ல் அறிவித்த அமெரிக்கா, அவரை தீர்த்துக் கட்டுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தது.
இந்நிலையில், ஈராக்கின் அல்அன்பார் மாகாணத்தில் அவர் பதுங்கியிருப்பதாக ஈராக் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈராக் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவத்தினர் அதிரடி தாக்குதலை நடத்தினர். விமானத்தில் இருந்து, அபு கதீஜா தங்கியிருந்த இடத்தின் மீது குண்டு மழை பொழிந்ததில், அவரும், மற்றொரு பயங்கரவாதியும் உயிரிழந்தனர்.
கடந்த 13-ம் தேதி நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை, அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்ட் அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதற்கு முன் நடந்த தாக்குதல்களில் அபு கதீஜா தப்பியபோது கிடைத்த மாதிரிகளை கொண்டு, டி.என்.ஏ., சோதனை நடத்தியதில், கொல்லப்பட்டது அபு கதீஜா தான் என உறுதியானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. சம்பவ இடத்தில் ஏராளமான ஆயுதங்களும், தற்கொலைப்படை தாக்குதலுக்காக பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வெடிகுண்டு ஆடைகளும் சிக்கின. அபு கதீஜாவின் மரணம், மத்திய கிழக்கு நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவையும், நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணி தொடரும் என, அமெரிக்க ராணுவ தளபதிகளில் ஒருவரான மைக்கேல் எரிக் தெரிவித்தார்.
''ஈராக்கிற்கும், உலகிற்கும் அச்சுறுத்தலாக இருந்த மிக முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவரான அபு கதீஜா கொல்லப்பட்டார்,'' என, ஈராக் பிரதமர் முகமது ஷியா கூறினார்.
டிரம்ப் மகிழ்ச்சி : அபு கதீஜா மீது தாக்குதல் நடத்திய வீடியோவை, அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டது. அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், 'நம் துணிச்சலான போர் வீரர்களால், ஈராக்கில் தலைமறைவாக பதுங்கி வாழ்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி வேட்டையாடப்பட்டார். ஈராக் ராணுவம், குர்தீஷ் பிராந்திய அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், அபு கதீஜாவின் வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டது. கூட்டு பலத்தால் நமக்கு அமைதி கிடைத்துள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.