சீமான்னின் சீற்றம் வளமற்ற வாரீசு அரசியல்! கருணாநிதி மகன் முதலமைச்சர் - ஸ்டாலின் மகன் உதயநிதி துணை முதலமைச்சர்!.
‘ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு’. ஆனால், அவர் முடிவுக்கு வரப்போறாரு.

“ஸ்டாலின்தான் வராரு” என்றனர், ஆனால் இந்த தேர்தலில் மக்கள் தி.மு.க-வைத் தூக்கி எறியப் போகிறார்கள். ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாதி வரி கணக்கெடுப்பு, சமூக நீதி, பஞ்சமி நிலம் மீட்பு பேரணி நேற்று (மார்ச் 16) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பேரணியானது தண்டலாம் பகுதியிலிருந்து திருப்போரூர் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை வரை நடைபெற்ற நிலையில் இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அதையடுத்து பொதுக்கூட்ட மேடையில் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முடியும் எனக் காரணங்கள் காட்டி மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மறுக்கிறார்கள். அனைத்திலும் திமுக மாநில உரிமை எனப் பேசினால் மட்டும் போதாது. சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்கலாம் என இருக்கும் போது அந்த உரிமையை ஏன்? மீட்டெடுக்க முன்வருவதில்லை.
‘ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு’ எனப் பாடினார்கள். ஆனால், அவர் முடிவுக்கு வரப்போறாரு என்பதுதான் உண்மை. தன்னாட்சி மாநில உரிமை என்று முழங்கியவர்கள் காணாமல் போகியுள்ளனர். ஆனால், வீடு வாரியாக ஓட்டு எவ்வளவு என எண்ணி ஓட்டுக்கு, நோட்டு கொடுப்பதில் மட்டும் நன்றாகக் கணக்கு வைத்துள்ளனர். இந்த சாதிக்கு இந்த தொகுதியில் இவ்வளவு ஓட்டு இருக்கிறது என திமுகவிற்குத் தெரியுமா? தெரியாதா? உண்மையில் அவர்களிடம் கணக்கிருக்கும்.
இவை எல்லவற்றிக்கும் மக்கள் பதில் கூறுவார்கள். இந்த தேர்தலில் மக்கள் மு.க. ஸ்டாலினைத் தூக்கி எறியப் போகிறார்கள். ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் நம்பர் 1 முதலமைச்சர், அவர் ஆட்சியில் குறைச் சொல்லவே முடியாது போன்று விளம்பரப்படுத்துகிறார்கள். நம்பர் 1 முதலமைச்சர், என்றால் அவர் எதில் நம்பர் ஒன்றாக உள்ளார்? எந்த தகுதியும் இல்லாமல், முன்னாள் முதலமைச்சர் மகன் என்ற தகுதியோடு இவர் முதலமைச்சராக உள்ளார். அந்த வகையில் அவர் நம்பர் 1 முதலமைச்சராக இருக்கிறார்.
ஒரு வீரனை எதிர்க்க ஆயுதங்களைத் தான் கொண்டு வருவார்கள். ஆனால் இவர்கள் அவதூறு கொண்டு வருகிறார்கள். என் மீது அவதூறு பரப்பி, என்னை பலவீனமாக்க நினைக்கிறார்கள். உண்மையில் பெரியார் எங்களுக்கான சமூக நீதியைப் பெற்றுக் கொடுத்திருந்தால், நாங்கள் ஏன்? முச்சந்தியிலிருந்து மூச்சு முட்ட குரல் கொடுத்துக்கிட்டு இருக்கிறோம். அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து எனப் பெரியார் பார்க்கிறார்.
இரண்டு பெரிய பதவிகள் ஒன்று முதலமைச்சர் மற்றொன்று துணை முதலமைச்சர். அப்பனுக்கும், மகனாகப் பிறந்ததால் பிறப்பால் மட்டுமே பதவி பெறுகின்றனர். ஸ்டாலின் மகன் உதயநிதி துணை முதலமைச்சர் கருணாநிதி மகன் முதலமைச்சர்” எனப் பேசினார். இந்தக் கூட்டத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.