22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; சத்தீஸ்கரில் அதிகாலை சம்பவம்!
படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறைந்தபட்சம் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்று அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை இவ்விரு மாவட்டங்களுக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கூட்டுப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
அப்போது, பிஜாப்பூர் - தன்டேவாடா மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட பஸ்தார் வனக்கோட்ட பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். உடனே இருதரப்பும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பல நிமிடங்கள் நீடித்த இந்தச் சண்டையில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒரு வீரரும் வீரமரணம் அடைந்தார் என்றும் அவர்கள் கூறினர்.
இதுபோன்று, கான்கர் மாவட்டத்துக்குட்பட்ட கோரலஸ்கோடா கிராமத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்ட்டர் நடைபெற்ற இடங்களில் இருந்து 22 நக்சலைட்டுகளின் உடல்களுடன் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்தார். என்கவுன்ட்டர் நடைபெற்ற இடங்களில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
பிஜாப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட இந்திரவதி தேசியப் பூங்கா பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூலை மாதம் பருவமழை தொடங்கிவிடும் என்பதால், அதற்கு முன்னதாக மார்ச் முதல் ஜுன் வரையிலான கோடை காலத்தில் பஸ்தார் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் தாக்குதல்களை நடத்துவது வழக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் அரசு வாகனங்கள் உள்ளிட்ட அரசின் சொத்துகளுக்கு சேதம் விளைக்கும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல்களை நக்சலைட்டுகள தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நக்சல்களின் தந்திரமான இந்த எதிர்தாக்குதல்களில் (Tactical Counter Offensive Campaign) பாதுகாப்புப் படையினர் ஏராளமானோர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலை முறியடிக்கும் நோக்கத்துடன் பாதுகாப்புப் படையினர் தற்போது தீவிர தேடுதலை மேற்கொண்டு நக்சலைட்டுகளை வேட்டையாடி வருகின்றனர்.