தூய்மையாக ஓடிய நான் கழிவுநீரான துயரம் தெரியுமா...? வைகையின் கண்ணீர் வரலாறு!
'தமிழ் இலக்கியங்களில் அதிகம் போற்றிப் புகழப்படும் வைகை ஆற்றின் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன் நான்.

திறமையான நீர் மேலாண்மைக்கு உலகளவில் வைகையே சிறந்த எடுத்துக்காட்டு என ஆங்கிலேயரே புகழ் பாடிய மதுரை வைகை ஆற்றை கழிவுநீர், குப்பையின் அபாயத்தில் இருந்து காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றங்கரை தொடங்கி, தெற்கே குமரி முனை வரை 1600 கி.மீ. நீளம் விரிந்து பரவியுள்ள என் தாய் மேற்குத் தொடர்ச்சி மலை பெற்றெடுத்த பல நூறு நதிகளுள் நானும் ஒருத்தி. தமிழ்நாட்டிலேயே தோன்றி, தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளேயே நிறைவு பெறும் நதிகளுள் நானும் ஒருத்தி. எனது கரையில் தான் மொழிக்கென சங்கம் வைத்து, தமிழ் வளர்த்தார்கள். உலகின் மிகப் பழமை வாய்ந்த அரச வம்சமாகக் கருதப்படுகின்ற பாண்டிய மன்னர்களே போற்றி வணங்குகின்ற பெருமைக்குரியவள் நான். என்னைப் பாடாத சங்கப் புலவர்கள் இல்லை.
எனது பாசனத்தில் விளைந்த நெற்கதிர்களைத்தான் 'மாடு கட்டிப் போராடித்தால் மாளாது செந்நெல்லென்று யானை கட்டிப் போரடித்த மாமதுரை' என்று பாடுமளவுக்கு என்னால் உழவர்கள் பாசன வசதி பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர். உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்நாளில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்ல, சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கும் பாசன வசதி தருகிறேன். தமிழ்நாட்டில் தற்போதுள்ள மொத்த நீர்வளத்தில் எனது பங்கு 6.7 விழுக்காடு மட்டும் தான், என்றாலும் எனது தேவையைப் பற்றி தென் மாவட்ட மக்களிடம் கேட்டுப் பாருங்கள்... மதுரையில் தற்போதுள்ள மக்கள்தொகையின்படி நாளொன்றுக்கு ஒருவரின் தண்ணீரின் தேவை சுமார் 150 லிட்டர் எனும்போது, கிடைக்கின்ற தண்ணீரை மிகச் சிறப்பான வகையில் பயன்படுத்தும் அக்கறையும், பொறுப்புணர்வும்தான் தற்போதைய தேவை. ஆகையால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடி வரும் என்னைப் பாதுகாப்பதும், அக்கறையுடன் பராமரிப்பதும் காலத்தின் கட்டாயம் மட்டுமன்று கடமையும்கூட.
நீரியல் அறிஞர் முனைவர் சீனிவாசன்.
என்னைப் பற்றி இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பட்டம் பெற்ற வரும் நீரியல் அறிஞருமான முனைவர் சீனிவாசன் கூறுவதை சற்று கேளுங்களேன்... என் பெருமை என்னவென்று உங்களுக்குத் தெரியும். 'தமிழ்நாட்டு நதிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது வைகை. காவிரிக்கு அடுத்தபடியாக பெரியதாகவும் அதிக அளவு தண்ணீரைக் கொண்டதும் பாசன நிலங்களைக் கொண்டதும் வைகை தான். அதிக அளவிலான மக்கள் சாந்து வாழக்கூடிய நதிப்படுகையும் இதுதான். சுமார் 7,200 சகிமீ. கொண்ட வைகை நதியில் பெய்யக்கூடிய அல்லது வடியக் கூடிய மழைநீர் அனைத்தும் ஆங்காங்கே இருக்கக்கூடிய குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றிற்கு கால்வாய்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு முழு நீர்மேலாண்மை இந்த வைகை வடிநிலப்பகுதியில் மட்டும்தான் நடைபெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்கு முன்பே தற்போதுள்ள தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் சிறிய அளவிலான அணைக்கட்டுகள் இருந்தன. அவற்றின் மூலமாக அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டன. ஆங்கிலேய ஆய்வாளர் நெல்சன் எழுதிய மதுரை மாவட்ட கெஸட்டின் அடிப்படையில், 500 இடங்களுக்கும் மேல் வைகை ஆற்றின் நீர் திருப்பப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. தற்போது அவை வெகுவாகக் குறைந்து சுமார் 120 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன.
அவ்வாறு கால்வாய்கள் மூலமாக வைகை ஆற்றிலிலிருந்து சமார் 1800 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது என்று ஒரு தகவலும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய், ஏரி, குளங்களுக்கு வைகை தண்ணீர் திருப்பி கொண்டு செல்லப்படுவதாக மற்றொரு எண்ணிக்கையும் சொல்லப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் வைகை நதியில் ஓடக்கூடிய தண்ணீர் பல்வேறு வகையிலும் முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்பது தான் இதன் சிறப்பு.
வைகையின் சிறப்புக் குறித்து பல ஆங்கிலேயேப் பொறியாளர்களும், எழுத்தாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனின் சகோதரர் ஃபிரெட்ரிக் காட்டன். இவர் மதுரை பகுதியில் வேலை செய்த பொறியாளர் ஆவார். தன்னுடைய 90-ஆவது வயதில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவின் போது, 'உலகத்தின் மிகச் சிறப்பான நீர் மேலாண்மையை காண வேண்டும் என்று நினைத்தால், மதுரைக்குச் சென்று வைகை ஆற்றைப் பார்வையிடுங்கள். அது ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். இதன் முக்கியமான சாராம்சம் என்னவென்றால், ஒரு நதியை எந்தவிதத்திலும் நிறுத்தாமல் சிதைக்காமல் நதிப்படுகை நீரை சிறப்பான முறையில் நீர் நிர்வாகம் செய்யப்படுதையே அவர் குறிப்பிடுகிறார்' என்கிறார்.
இப்போது மீண்டும் நானே பேசுகிறேன்.... என்னிடமிருந்து பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கால்வாய்களெல்லாம் இன்று கட்டிடங்களாக மாறி, கரைகள் எல்லாம் தூர்க்கப்பட்டு தொழுநோயாளிகளைப் போன்று மாற்றிய பெருமை யாரைச் சேரும்? என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். எனது கரையில் வளர்ந்த தாவரங்களும், மரங்களும் மதுரையின் அழகுக்கே அழகு சேர்த்த விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா..? மரங்கள், தாவரங்கள் குறித்த ஆய்வாளரும், 'நறுங்கடம்பு' என்ற நூலின் ஆசிரியருமான கார்த்திகேயன் எனது பெருமையைப் பற்றிக் கூறுவதை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.
'நறுங்கடம்பு' என்ற நூலின் ஆசிரியர் கார்த்திகேயன்

'தமிழ் இலக்கியங்களில் அதிகம் போற்றிப் புகழப்படும் வைகை ஆற்றின் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன் நான். அந்த அடிப்படையில் வைகை மீது அதிகமான பற்றுதல் உண்டு. குறிப்பாக சிலப்பதிகாரத்தில் 'புனல் ஆறு அன்று, இது பூம்பூனம் ஆறு' என்ற குறிப்பு, கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் வைகை ஆற்றைக் கடக்கும் போது, இந்த ஆறு நீரால் நிறைந்தது அல்ல. மலர்களால் நிறைந்தது என்று குறிப்பிடும் பாடலில் இடம் பெற்றுள்ளது. இந்த வைகையாற்றின் மீது 24 வகையான பூக்கள் படர்ந்து தண்ணீரை மறைத்த வண்ணம் செல்கின்றன என்று 'குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்' என அந்தப் பாடலில் பாடியிருப்பார். ஒருவேளை இளங்கோவடிகள் மிகைப்படுத்தியிருப்பாரோ என்று நினைத்தால், 'பரிபாடலிலும்' இதேபோன்ற வைகையைப் புகழும் பாடல் வருகிறது.
பரிபாடல் வைகையைப் பற்றிக் கூறும் போது 'நீர்ப்பூந்துறை' 'திருமருதத்துறை' திருமருத முன்றுறை' என மருத மரங்களால் வைகை சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. மலர்ப்போர்வை போர்த்தப்பட்ட நதி என்று வைகையை பரிபாடலும் பாடுகிறது. சமகாலத்தில் இது சரியாக உள்ளதா? என்று தேடிப் பார்த்தால், வைகையின் வட கரையில் செல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோவிலின் உள்ளே தல விருட்சமாக கொன்றை மரம் உள்ளது. ஆனால், அங்குள்ள பெண் தெய்வத்தின் பெயர் 'குறவம் கமழ் குழலி' என்று உள்ளதோடு இதனைப் பொருத்திப் பார்க்கலாம். குறவ மரங்கள் மதுரை நகருக்குள் அழிந்து போய்விட்டாலும், அவை இருந்ததற்கான சான்றாக இந்தக் கோவில் வாழும் சாட்சியாக உள்ளது.
ஆனால், தற்போது வைகையாற்றுக்குள் ஆகாயத் தாமரையும், சீமைக்கருவேல மரங்களும்தான் மண்டிக்கிடக்கின்றன. அதே போன்று வைகையின் இருகரையிலும் சாலை அமைக்கிறோம் என்ற பெயரால், மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. கிட்டத்தட்ட துவரிமானில் தொடங்கி சிலைமான் வரை, மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்த மருத மரம் ஒன்று கூட இல்லை என்பது வேதனைக்குரியது' என்றார்.
வையை என்று சங்க இலக்கியங்கள் அழைத்த காலத்தில் நான் மிகச் செழுமையாகவும், அரசும் மக்களும் மதிக்கும் நதியாகவும் வாழ்வாங்கு வாழ்ந்ததை இன்று நினைக்கும் போது என் நெஞ்சம் விம்முகிறது. கழிவுகளையும், குப்பைகளையும் சுமந்து செல்லும் அவல நிலைக்கு என்னைத் தள்ளி விட்டு, மதுரையின் மற்றொரு கூவம் என்று எனக்கு ஒரு பெயரிட்டு அழைப்பதைத் தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை மக்களே... என்னைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து பல சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைவர் ராஜன் கூறுவதைக் கேட்டால் எனது குமுறலின் உண்மை உங்களுக்கெல்லாம் புரியும்.

'தேனி மாவட்டத்தில் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரை 258 கி.மீ. தூரம் பயணிக்கிறது வைகை ஆறு. மதுரை நகருக்குள் வரும்போது தான் இந்த நதி மிக மோசமான சீரழிவுகளைச் சந்திக்கிறது. தொடர்ந்து வைகையாற்றுக்குள் கழிவுநீர் தான் ஓடுகிறது. ஒருபக்கம் பாலிதீன் குப்பைகள், மறுபக்கம் ஆகாயத்தாமரைகள், கருவேலமரம் என பல்வேறு சுற்றுச்சூழல் சீரழிவுகளும் மாசுபாடுகளும் வைகை ஆற்றில் தொடர்ந்து நிகழ்கின்றன. வேறு எந்த மாவட்டத்திலும் இந்த அளவுக்கு வைகை மாசுபாட்டை சந்திக்கவில்லை. இதற்குக் காரணம் மதுரை மாநகராட்சி. மதுரைக்குள் ஓடும் வைகையாற்றுக்குள் மட்டும் கிட்டத்தட்ட 68 இடங்களில் நகரின் கழிவுநீர் கலந்துவிடப்படுகிறது.
இதனால் இங்கு நிலத்தடி நீர் கடும் மாசுபாடு அடைந்துள்ளது. மதுரை மாநகராட்சியின் தினசரி தூய்மைப் பணித் திட்டத்தில் வைகையாறு இடம் பெறவில்லை. தொடர்ந்து வைகையாற்றின் வடகரை, தென்கரையில்தான் தூய்மைப் பணி செய்கிறார்களே தவிர, ஆற்றுக்குள் இப்பணிகளை மேற்கொள்வதில்லை. அண்மையில் ஆர்டிஐ மூலம் நான் கேட்ட தகவலின் அடிப்படையில், வைகையாற்றுக்குள் சுமார் 8 டன் அளவிற்கு பாலிதீன் குப்பைகள் உள்ளதாக மதுரை மாநகராட்சியே தகவல் கொடுத்துள்ளது. இந்தக் குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நீதியரசர்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் உள்ளனர்.
ஆகாயத் தாமரை, கருவேல மரம் அகற்றம், குப்பை கொட்டுபவர்களைக் கண்காணித்தல், சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தல் என பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டும் கூட மதுரை மாநகராட்சி அவற்றை மதிக்கவே இல்லை. வைகையைப் பராமரிப்பதில் மதுரை மாநகராட்சி சுணக்கம் காட்டுகிறது எனக் குறிப்பிட்டு அண்மையில் கூட உயர்நீதிமன்றம், ரூ.5.8 கோடி அபராதம் விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை இணைந்து செயல்படவில்லை என்றால் வைகையைக் காப்பாற்ற முடியாது' என்றார்.
ஆகாயத்தாமரைகளால் மூடியிருக்கும் வைகை ஆறு .

என்னுடைய பெருமையையும், இன்றைக்கு நான் அடைந்துள்ள சிறுமையையும் ஆற்றாது அழுத கண்ணீரோடு உங்களிடம் பகிர்ந்து விட்டேன். இனி என்னை காப்பற்ற வேண்டிய கடமை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களாகிய உங்களிடமே உள்ளது.