மருத்துவமனை மீது குண்டு வீசிய இஸ்ரேல்! பொதுமக்கள் உயிரிழப்பு 50,000ஐ தாண்டியது
தெற்கு காசாவில் கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் திடீரென தாக்குதல்.

ஹமாஸை தாக்குகிறோம் என்று கூறி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. நேற்றிரவு நடந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை.
இந்த தாக்குதல் மூலம் பலியானோரின் எண்ணிக்கை கணக்கில் கொண்டால், இஸ்ரேல் ராணுவம் கொலை செய்த பொதுமக்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டும் என்று காசா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
தெற்கு காசாவில் கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனை முழுவதும் கடுமையான சேதங்களும், தீ விபத்தும் ஏற்பட்டிருக்கிறது. எனவே உடனடியாக நோயாளிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பலி எண்ணிக்கை பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவத்தை சமாளித்துள்ள இஸ்ரேல், மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் பகுதியில்தான் ஹமாஸ் படையினர் இயங்கி வருகின்றனர். எனவேதான் நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால்தான் பொதுமக்கள் உயிரிழக்கின்றனர் என்றும் இஸ்ரேல் சாக்கு சொல்லி வருகிறது.
ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மார்க்கெட்டை இழந்தவராக இருக்கிறார். தன் மீதான கவனத்தை அதிகரிக்க அவர் போரை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறார். தேர்தல் நடந்தால் தோற்றுவிடுவோம் என்பதால் போரில் கவனம் செலுத்தி வருகிறார் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நெதன்யாகுவுக்கு எதிராக நடக்கும் உள்நாட்டு மக்களின் போராட்டங்கள் இந்த கூற்றை உறுதி செய்வதை போல அமைந்திருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போரை நிறுத்த சீனாவும், ரஷ்யாவும் இதர பல பாலஸ்தீன ஆதரவு நாடுகளும் தொடர்ந்து முயன்றன. தற்காலிக போர் நிறுத்தமும் கொண்டுவரப்பட்டது. இதில் 3 கட்டங்கள் இருக்கும்.
1. முதல் கட்டத்தில் இரு தரப்பிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும். இஸ்ரேல் கைது செய்து வைத்திருந்த 2000 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யதது. பதிலுக்கு 25 பணைய கைதிகளையும், 8 பேரின் உடல்களையும் ஹமாஸ் ஒப்படைத்தது. காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது இந்த போர் நிறுத்தத்தின் முக்கியமான அம்சம்.
ஆனால், இஸ்ரேல் இதனை வெறும் 10% அளவுக்கு மட்டுமே அனுமதித்தது. எனவே ஹமாஸ் தரப்பு இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தல்களை முன் வைக்க தொடங்கியது. இஸ்ரேல் அசைந்து கொடுக்கவில்லை.
2. சரி போகட்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காவது வாங்க என்று ஹமாஸ் அழைத்தது. இதில் 34 பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். பதிலுக்கு சில பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும். மட்டுமல்லாது நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக மாறாக மார்ச் 18ம் தேதி அறிவித்தது. அன்றைய தினமே காசா மீது விமான தாக்குதலையும் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது.