பாகிஸ்தானின் மூக்கை உடைத்த இந்தியா.. ஐநாவில் அடித்து ஆடிய பிரதிநிதி! மோடி, ஜெய்சங்கரை போல் அதிரடி!
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளை விமர்சனம்.

‛‛தவறான அஜன்டா மூலம் ஐநாவின் கவனத்தை திசை திருப்ப வேண்டாம். ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் எங்களிடம் வழங்க வேண்டும்'' என்று ஐநாவில் பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் பதிலடியை கொடுத்தது.
அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து நம்முடன் மோதி வருகிறது. நமக்கு சொந்தமான காஷ்மீரை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமின்றி நம்மிடம் உள்ள காஷ்மீருக்கும், பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் நுழைந்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு நம் நாட்டு வீரர்கள் உரிய முறையில் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனாலும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுவதை மட்டும் விடாத நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை தொடர்ந்து சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் ஐநாவில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரான பர்வதனேனி ஹரீஷ் கூறுகையில், ‛‛பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு காஷ்மீர் என்ற இந்தியன் யூனியன் பிரதேசம் பற்றி தேவையற்ற கருத்துகளை கூறி உள்ளார்.
இதனை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஜம்மு காஷ்மீர் பற்றி தொடர்ச்சியாகவும் சட்டவிரோதமாகவும் பாகிஸ்தான் பேசுவது என்பது அவர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்தாதது. குறுகிய மனப்பான்மை மற்றும் தவறான அஜென்டா மூலம் இந்த மன்றத்தில் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டாம்.
ஏனென்றால் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் எங்களிடம் வழங்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்'' என்றார்.
பர்வதனேனி ஹரீசின் இந்த பேச்சின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஜம்மு காஷ்மீர் பற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசியிருந்தார். ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் தொடர்பாக விவாதிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து தான் பர்வதனேனி ஹரீஸ் விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி அமெரிக்கா பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் இண்டர்வியூ கொடுத்தார். அதில், ‛‛இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக போரை தொடங்கி உள்ளது. . நான் முதல்முறையாக பிரதமராக பதவியேற்றபோது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ெஷரீப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தேன். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை கொண்டு வர நான் முயன்றேன். அமைதியை வளர்ப்பதற்காக நான் என்ன ஒவ்வொரு முயற்சியும் விரோதத்தை தான் தந்தது. பாகிஸ்தான் என்பது பயங்கரவாதத்தின் வேராக உள்ளது. பயங்கரவாதத்தால் இந்தியா மட்டுமின்றி உலகின் எந்த பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட அதன் பாதை நேராக பாகிஸ்தானை நோக்கி செல்கிறது'' என்று பிரதமர் மோடி விளாசியிருந்தார்.
டெல்லியில் நடந்த ரைசீனா உரையாடல் 2025யில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளை விமர்சனம் செய்தார். அப்போது அவர் ‛‛காஷ்மீர் விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் சமமாக மதிப்பீடு செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகள் யார்? பிரிட்டன் கனடா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்காவா? மன்னிக்கவும், இந்த விஷயத்தில் எனக்கு சில கேள்விகள் உள்ளன.
இன்று நாம் நாடுகளுக்கு இடையேயான அரசியல் தலையீடு பற்றி பேசுகிறோம். மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகளுக்குள் செல்லும்போது, அது ஜனநாயக முறையில் சுதந்திரங்களை பின்பற்றுவதாக இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகள் மேற்கத்திய நாடுகளின் விவகாரங்களில் தலையீடும்போது அது கெட்ட நோக்கத்தை கொண்டதாக சொல்லப்படுகிறது. நியாயமாக செயல்படும் ஐநா சபை வேண்டும்'' என்று கூறியிருந்தார். இப்படியான சூழலில் தான் தற்போது ஐநாவுக்கான இந்திய சிறப்பு பிரநிதிநியான தூதர் பர்வதனேனி ஹரீஷ் பாகிஸ்தானை விமர்சனம் செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.