இயக்குநர் கனவு... இறுதிவரை மனோஜின் நிறைவேறாத ஒரு ஆசை!
"தாஜ்மஹால்" படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.

இயக்குநர் இமயம் எனக் கொண்டாடப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம் தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவருக்குக் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
தந்தையைப் போலவே இயக்குநராக வேண்டும் எனக் கனவுடன் இருந்தவர் மனோஜ். ஆனால், நடிகனாக வேண்டும் என்று தந்தை பாரதிராஜா ஆசைக்கு இணங்கி, அமெரிக்காவின் சவுத் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் தியேட்டர் நடிப்பு குறித்துப் படித்திருக்கிறார். பின்னர் "தாஜ்மஹால்" படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா. பாரதிராஜாவின் இயக்கம், மணிரத்னத்தின் திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எனப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அப்படம் வெளியானது.
"தாஜ்மஹால்" படத்தைத் தொடர்ந்து "வருஷமெல்லாம் வசந்தம்", "சமுத்திரம்", "அல்லி அர்ஜுனா", உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இரண்டாவது நாயகனாகவும் நடிப்பை வெளிப்படுத்தினார். ஈர நிலம், சாதுர்யன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், எந்தப் படமும் நடிகனாக அவருக்கு எதிர்பார்த்த வெற்றியினைத் தரவில்லை. தொடர் தோல்வி தந்த பாதிப்பால், இடையே பல ஆண்டுகள் நடிப்பில் தலைகாட்டாமல் இருந்த அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான "எந்திரன்" திரைப்படத்தில் ஒரு துணை இயக்குநராகப் பணியாற்றி இருந்தார். அப்படத்தில் சிட்டி வேடத்துக்கு நிறைய காட்சிகள் மனோஜ் தான் டூப் ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின், கடந்த சில ஆண்டுகளாக "ஈஸ்வரன்", "மாநாடு", "விருமன்" உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். நடிகராக வலம் வந்த மனோஜ், தனது கனவான இயக்குநர் அவதாரத்தையும் முயற்சித்துப் பார்த்தார். அந்த வகையில் தனது தந்தை பாரதிராஜாவை வைத்து இளையராஜா இசையில் "மார்கழி திங்கள்" என்ற படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகம் ஆனார்.