நான் தெரிவு செய்தது தென்கயிலை எனும் நமது கோணேசர் திருக்கோயிலை.
"தென்கயிலை எனப்படும் திருக்கோணேச்சரம்" ஒரு சிறு ஆய்வு.

தென்கயிலை எனும் நமது கோணேசர் திருக்கோயிலை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்எனது 'கல்வெட்டு மற்றும் தொல்லியல்' 'பட்டயப்படிப்பின்'(Diploma) கடைசியில் கொடுக்கவேண்டியிருந்த ஆய்வுக்கட்டுரைக்காக, என் சக மாணவர்கள் தமிழகத்தின் கோயில்களைத் தெரிவு செய்தனர்..நான் தெரிவு செய்தது தென்கயிலை எனும் நமது கோணேசர் திருக்கோயிலை.
"தென்கயிலை எனப்படும் திருக்கோணேச்சரம்" ஒரு சிறு ஆய்வு.
முன்னுரை.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஈழம் ஒரு சிவபூமியாகவே விளங்கிவருகிறது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பழமையான, பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக கோணேசர் கோயில் எனும் திருக்கோணேச்சரம் விளங்குகின்றது.
திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இங்கே சிவனை, கோணேசர் எனும் பெயர் கொண்டே மக்கள் அன்போடு அழைக்கின்றனர். திருகோணமலை மாநகரின் மையத்தில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட, ஓர் உயர்ந்த அழகிய குன்றான சுவாமிமலையின் உச்சியில் கடலைப் பார்த்தவாறு இக் கோயில் அமைந்திருக்கிறது. திருக்கோணேச்சரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவைகளுக்கான வரலாற்றை கல்வெட்டுகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், ஐதீகக் கதைகள், மேலைநாட்டார் குறிப்புகள் மூலம் அறியக் கூடியதாயுள்ளது.
கோணேசர் கல்வெட்டு, தட்சண கைலாய புராணம், மட்டக்களப்பு மான்மியம், யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை, திருக்கோணாசல புராணம், திருக்கோணாசல வைபவம் திருக்கரைசைப் புராணம் முதலிய நூல்கள் இவ்வாலயத்தின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக் கூறுகின்றன. கலாநிதி செ. குணசிங்கம், கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை, கலாநிதி
சி.பத்மநாதன், கலாநிதி இந்திரபாலா, கலாநிதி W. பாலேந்திரா முதலானோர் விரிவான ஆய்வுகளைச் செய்து இக்கோயில் பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கூறியுள்ளனர். ஈழத்தின் பண்டைய, பழம்பெருமை வாய்ந்த சிவாலயங்களுள் திருக்கோணேச்சரம் சிறப்புப் பெற்றது. இவ்வாலயம் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் ஈழத்தை ஆண்ட “மனுராசா” அல்லது “மாணிக்கராசா” என்ற மன்னன் கட்டியதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதேபோல் புத்தர் பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே கோணேசர் கோயில் கட்டப்பட்டது என்ற கருத்துமுண்டு. உலகத்தின் பழம் பெருமை வாய்ந்த கோணேசர் கோயில் பற்றி, பலர் பலவித ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். தோண்டத் தோண்ட ஊறும் கேணி போல வரலாற்றுச் செய்திகள் நிறைந்த இக் கோயிலைப்பற்றி நானும் ஒரு சிறு ஆய்வினை இங்கே வழங்க முனைகிறேன்.
நன்றி!
அறிமுகம்.
காலத்துக்குக் காலம் நீரூழிகளால் பண்டைய ஈழ நிலப்பகுதிகள் அழிந்தபோது, ஈழத்தின் பல பகுதிகள் கடலினுள் மூழ்கின. சில நிலப்பகுதிகள் கடலுள் அமிழ்ந்தும் சில பகுதிகள் நில மட்டத்தினின்று மேலேயும் காணப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மூன்று பெரும் நீரூழிகள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது நீரூழியின் பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன.
திருக்கோணேசர் திருத்தலம் உண்மை வரலாற்றையும் புராணக் கதைகளையும் தன்னகத்தே கொண்டது. அகில், தேவதாரு, சந்தனம் போன்ற மணங்கமழும் மரங்கள் சூழ, 'குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும்' இத்தலம் மான்களும் மயில்களும் விளையாடித்திரியும் சோலை நடுவே, மிக மிக அமைதியாக, மனதுக்கு இதம் தரும் சூழலில், எழுந்தருளி இருப்பதைக் காணமுடியும். திருக்கோணேசர் கோயிலுடன் சிவபக்தனான இராவணனுக்குப் பல பிணைப்புகள் இருந்திருக்கிறன. இராவணேசுவரனோடு அவன் தாயும் இந்தக் கோயிலில் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இன்றைய கோணேசர் கோயில் கருவறை விமானத்தில் நாம் எங்கும் காணக்கிடைக்காத ஒன்பது தலைகளுடனும் கொய்தெடுத்த பத்தாவது தலையை, யாழ்போன்று கையிலே வைத்திருக்கும் உலகின் மிகப்பெரும் இசைக்கலைஞன் இராவணேசுவரனின் சிற்பம் காணக்கிடைக்கிறது. கோவிலின் வலது பக்க மலையில் நேர் செங்குத்தாக ஏறத்தாழ 300 அடி ஆழத்திற்கு இரண்டாகப் பிளந்தது போல் காணப்படும் மலைப்பிரிவு 'இராவணன் வெட்டு' என அழைக்கப்படுகிறது.கோவில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் ஆழ்கடலுக்குள் நன்னீர் ஊற்று இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தச் சிறு ஊற்று 'பாவநாச தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. இந் நன்னீரூற்று கோணேசர் மலையை சுற்றிச் சுரக்கிறது. இன்றளவும், கடலைப் பார்த்தவாறு பாவநாச தீர்த்தத்திற்கும் இராவணன் வெட்டுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதே போல இடது பக்கம் அமைந்துள்ள 'கல்'ஆல மரத்துக்கும் நாகலிங்கத்திற்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதோடு, கீழே உள்ள கடல் அடிவாரத்தை நோக்கியும் வழிபாடு செய்யப்படுவது சிறப்பான வழமை. இப்போதுள்ள கோயிலின் கட்டட வடிவமைப்பு திராவிடக் கட்டடக் கலையைச் சேர்ந்ததாகும். கோயில் பற்றிய இன்னும் ஒரு முக்கிய குறிப்பு கூறப்படுகிறது. பண்டைய வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று, ஆழ்கடலில் மலையின் அடிவாரத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. கி.மு 306 இல் இடம்பெற்ற நீரூழியால் கடலில் மூழ்கி விட்டதாக ‘டெனன்ற்’(tenant) என்ற வரலாற்று அறிஞரின் “இலங்கைச் சரித்திரம்” எனும் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கோயில் அமைப்பில் மலை அடிவாரத்திலிருந்து ஒன்று, நடுப்பகுதியில் ஒன்று, மலை உச்சியில் ஒன்று என மூன்று கோயில்கள் இருந்திருக்கின்றன. அங்கே காணப்பட்ட மூன்று பெரும் கோயில்களான மாதுமை அம்பாள் கோயில், நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் போன்றவையே மலையிலே உள்ள சமதரையில் அமைந்திருந்தன. அதில் மலை உச்சியில் அமைந்த கோயிலே அலங்கார, சிற்ப வேலைகள் நிறைந்து காணப்பட்டனவாம்.
Dr. W. பாலேந்திரா, ஸ்பெயின் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் உள்ள அஜூடா அருங்காட்சியகத்தில் 1952ம் ஆண்டு பார்வையிட்ட ஒரு படத்தில் மூன்று கோயில்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.1961 ஆம் ஆண்டு மைக் வில்சன், றொட்னி ஜொன் கிளாஸ் ஆகியோர் திரைப்படம் ஒன்று எடுப்பதற்காகத் திருகோணமலைக் கடலில் சுழியோடிய போது, அங்கே கோயில் தூண்கள், தளங்கள் மற்றும் இடிபாடுகள் இருப்பதைக் கண்டதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஆர்தர் சி கிளார்க் கூறியுள்ள கருத்துகளிலிருந்து, பண்டைய கோணேசர் ஆலயம் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்பது புலனாகிறது. கோணேசர் கோயிலைக் கட்டியவன் மனு நீதிச் சோழன் வழி வந்த வர ராமதேவனின் மகன் குளக்கோட்டன் என்ற கூற்றும் உண்டு.புராண, வரலாற்று நூல்கள் பலவிதமான தகவல்களைக் கூறினாலும், இக் கதைகளினூடே சில வரலாற்றுத் தகவல்களைக் காணமுடிகிறது. குளக்கோட்டன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். இந்தியாவில் இருந்து ஈழத்துக்கு வந்தவன்.திருக்கோணேச்சரம் முதல் உன்னரசுகிரி எனப்படும் திருக்கோயில் வரை திருப்பணிகள் செய்தவன்.
ஆலயப் பணிகள் தடங்கலின்றி நடைபெறுவதற்காக வயல்களை நிவந்தம் அளித்தவன். அவ்வாறே இப்பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகத்திலிருந்து மக்களை வரவைத்து குடியமர்த்தியவன். ஆடக சௌந்தரியைத் திருமணம் செய்தவன். திருக்கோணமலையிலும் திருக்கோவிலும் (உன்னரசுகிரி) ஆட்சி புரிந்தவன். கந்தளாய்க் குளத்தை கட்டியவன். குளக்கோட்டன் கோணேசர் கோயிலைக் கட்டவில்லை. கோணேச்சரத்தை புனரமைத்து திருப்பணிகள் பல செய்தான் என்பதே உண்மையாகத் தெரிகிறது. மிகத்தொன்மையான கோணேசர் கோயிலுக்கு காலத்துக்குக்காலம் திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளன என்பதற்கு பல்வேறு தொல்லியல், வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
கந்தளாய்க் கல்வெட்டு, குச்சவெளிக் கல்வெட்டு, திரியாய்க் கல்வெட்டு கங்குவேலிக் கல்வெட்டு, பளமோட்டைச் சாசனம், பிரடெரிக் கோட்டைச் சாசனம் முதலியனவும் குடுமியான்மலை கல்வெட்டு, தென்னிந்திய கோயிற் சாசனங்கள் முதலியனவும் குளக்கோட்டன் தொடர்பாகவும் கோணேசர் கோயில் தொடர்பாகவும் பல தகவல்களைத் தருகின்றன.
கி.பி. 7ம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள், கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் சோழராட்சி நடைபெற்றபோது, கோணேசர்கோயில் பெரிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்களுக்குப் பின் பொலநறுவையை ஆண்ட கயவாகுமன்னன் கோணேச்சருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இக்கோயில் இடித்து அழிக்கப்பட்டது போத்துக்கேயர் காலத்திலே தான்.
போத்துக்கீசத் தளபதியாகவிருந்த “அசவிடோ” வினால் இடித்ததாகக் கூறப்படும் மூன்று ஈழக்கோயில்கள் பற்றி குவேறொஸ் அடிகள் “The temporal and spiritual conquest of ceylon” என்ற நூலில் குறிப்பிடுகிறார். அவை ரைக்கோணமலை, ரைக்கோயில், ரைக்கேதீஸ்வரம் என்பன. இவை முறையே திருகோணமலை திருக்கோயில் திருக்கேதீஸ்வரம் ஆகிய கோயில்களாகும். ஆனால் கி.பி. 1624 இல் கோணேசர் கோயிலை இடித்து அழித்தவன் “டொன் கான்ஸ்டன்டைன் சா டீ நோறாகா (கான்ஸ்டன்டைன் டீசா/ 1618 – 1630) கி.பி. 1624 இல் போர்த்துக்கேயத் தளபதி கான்ஸ்டான்டைன் டீசா தலைமையில் பறங்கியர் கோணேசர் கோயிலை இடித்து, அதன் கற்களைக் கொண்டு திருக்கோணமலை பிரெடறிக் கோட்டையைக் கட்டினர். அப்போது ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள், வரைபடங்கள், கட்டிடப்படங்கள் போன்றவற்றை போர்த்துக்கேய மன்னனுக்கு, டீசா அனுப்பி வைத்தான் எனவும் தெரியவருகிறது. அக்குறிப்பு ஒன்றில் கி.மு. 1300 ஆண்டளவில் மனுராசா அல்லது மாணிக்கராசா என்னும் மன்னன் இலங்கையை ஆண்ட காலத்தில், கோணேசர் கோயில் கட்டப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கோயில் பற்றி அறியப் பெரிதும் உதவுகின்ற இவனுடைய குறிப்புகளில் ஆலயத்தின் பரப்பளவு தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இக் குறிப்பின்படி தற்போது கோயில் அமைந்துள்ள கோட்டைப் பகுதி முழுவதுமே ஆலயத்தின் பகுதிகளாக இருந்திருக்கிறது. .கல்வெட்டு மற்றும் சான்றுகள். கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. டீசா அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற முன்கூற்று (தீர்க்கதரிசனம்) காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியமுடிகிறது. பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம்.
(மு) ன னெ கு ள கா ட ட ன மூ ட டு
(தி) ரு ப ப ணி யை
ன னெ ப ற ங் கி
(க ) க வெ ம ன னா
ன பொ ண னா
(ச ) ன யி ய ற (று )
(செ ) த வை த
(ண ) ணா
க ள
என உள்ளது.
இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.
இதனை,
‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள் பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின் மானே வடுகாய் வரும்.’’
திருக்கோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாக குவேறொஸ் பாதிரியார் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளாரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்த அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவேறோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.
‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின் பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னர சர்கள்.’’ இக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும் வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில் குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.
கண்ணகி வழக்குரையில்,
‘‘….மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்
மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து
மஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’ என்றும்,
யாழ்ப்பாண வைபவ மாலையில்,
‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’
என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது முன்கூற்று வியப்புக்குரியது.
இது தவிர கோட்டையில் கிரந்த எழுத்துடன் கூடிய கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது.
1945 ஆம் ஆண்டு இராணுவத்தினர் கோட்டையினுள் தோண்டியபோது செய்த போது இது கண்டுபிடிக்கப்பட்டது. ஓரத்தில் அலங்கார வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கதவின் துண்டு போல் காணப்படுகிறது. ஏழு வரிகள் கொண்ட அந்த கல்வெட்டில் சோழகங்கன் என்னும் மன்னன் ஈழத்துக்கு வந்த ஆண்டு பற்றி குறிப்பிடப்படுவதாக பரணவிதான கூறியுள்ளார்.
குளக்கோட்ட மன்னன் கோணேசருக்கு தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வமரத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான். தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு, சிவலிங்கம் வைக்கப்பட்டு, “வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்” என அழைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த கோயிலுக்கு, குளக்கோட்டன் செய்த திருப்பணிகள் பற்றி "கோணேசர் கல்வெட்டு" எனும் நூல் விரிவாகக் கூறுகிறது. இந்நூல் கிபி 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவரான கவிராச வரோதையர் என்பவரால் எழுதப்பெற்றது.
1263 ஆம் ஆண்டில் ஈழத்தைக் கைப்பற்றிய வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் வெற்றியின் அடையாளமாக இரட்டைமீன் சின்னத்தினை கோணேசர் கோட்டையில் பொறித்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது. அந்த இரட்டைக்கயல் சின்னம் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் இன்றளவும் காணப்படுகிறது.
1795ஆம் ஆண்டில் பிரிட்டிசார் இக்கோயிலைக் கைப்பற்றினர். அதன் பின்பு மக்கள் இடிந்த நிலையில் இருந்த கோயிலையே சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
1950 ஆம் ஆண்டு வரலாறு மீண்டும் புதைந்திருந்த சின்னங்களையும் திருச்சிலைகளையும் வெளியே கொண்டு வந்தது. அதே ஆண்டு கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
மீண்டும் 1990-ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மறுபடியும் பாதிக்கப்பட்ட இக்கோயில் 1993ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
பல ஆய்வாளர்கள் போர்த்துக்கேயர் காலத்தில் ஏற்பட்ட அழிவை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். கடற்கோளினால் ஏற்பட்ட அழிவுபற்றிக் கவனம் செலுத்தவில்லை. கடல்கோளினால் இவ்வாலயம் அழிவுற்றது என்பதற்கான பல தகவல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன. ஆழ்கடலில் அமர்ந்திருக்கும் கோணேசப் பெருமானுக்கு இன்றும் மலைப் பூசை கடலை நோக்கி நடத்தப்படுவதே இதற்குச் சிறந்த சான்றாகும். முறையான கடல் சார் ஆய்வுகள் மூலம் இவற்றை வெளிக்கொணர முடியும். வழிபாடு திருக்கோணேசர் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புப் பெற்றது. இத்தலத்தில் இறைவன் கோணேசரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கோவிலின் தீர்த்தம் “பாவநாசம்” (பாவங்களைக் கழுவி தீர்க்கவல்லது) என அழைக்கப்படுகிறது. கோவிலின் தலமரமாக பெரும் பாறைகளுக்கு நடுவே மிடுக்காகக் நிற்கும் “கல்லால மரம்” காணப்படுகிறது.
இவ்வாலயத்தில் ஆறுகால வேளையும் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பங்குனி உத்திரத்தில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி, 18 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். மரபு வழிக் கதைகளின்படி பண்டைய நாட்களில் ஆலய பெருவிழா முடிவில் கோணேசர் நகர்வலம் வரும்போது ஒருநாள் ‘வெள்ளை வில்பத்துக் கோணசர்’ கோயிலில் தங்கி செல்வதாகவும் கோணேசர் ஆலய தெப்பத்திருவிழா இவ்வாலயத்தின் அருகில் இருந்த குளமான மானாங்கேணியில் நிகழ்த்தப்பட்டு வந்ததாகவும் கருதப்படுகிறது. இங்கே சிவராத்திரியும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். கோணேசர் நகர்வலம் வந்து மக்களுக்கு அருளாசி வழங்குவார். இக்கோவில் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையான சக்தி பீடக் கோவில் போர்த்துக்கீச படைகளால் அழிக்கப்பட்டு விட்டதால் இந்த கோவிலின் அம்மன் சந்நிதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.
தேவாரச் சான்றுகள்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறித்துப் பாடியுள்ளார். அதிலே கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார்.
‘சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்’
1.
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
2.
கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.
3.
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
4.
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.
5.
தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
6.
பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே
7.
கிடைக்கப்பெறவில்லை.
8. எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே.
9.
அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.
10.
நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.
11.
குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே
கி. பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய ஊர்த்தொகை என்ற பதிகத்தில் 3-வது பாடலில் "மாகோணத்தானே" என கோணேசப்பெருமானைப் பாடுகிறார்.
“நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே”
கிபி 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழ் பாடலில்
"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்…. வருவோனே"
எனப்பாடுகிறார்.
அப்பர் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம், திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில் திருக்கோணேச்சரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்,
‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,
‘‘…தெக்கார மாகோணத்தானே....’’ எனப் பாடியுள்ளார்.
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,
‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்
மன்னு திருகோணமலைமகிழ்ந்து....’’
என்ற வரிகளும் காணப்படுகின்றன.
வரலாறு
குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஆகிய மூன்று திணைகளும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்திருப்பதால் மூன்று குணங்களையுடையது எனும் பொருளில் 'திருக்குணமலை' என்ற காரணப்பெயரும் கூறப்படுகிறது.
திருகோணமலை, திருக்கோணமலை, திருக்கோணமாமலை, திருக்கோணாசலம், திருக்குன்றாசலம், திரிகோணமலை, மச்சேந்திர பர்வதம், மச்சேசுவரம், தெட்சிண கைலாயம் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இக்கோயிலை “கோகர்ணம்” என இலங்கையின் வரலாறு கூறும் நூலாகக் கொள்ளப்படும் மகாவம்சம் கூறுகிறது.
மகாவம்சத்தில், விஜயனின் உடன் பிறப்பான சுமித்தனின் அழைப்பின் பேரில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பாண்டு வாசுதேவன் வந்திறங்கிய துறைமுகம் கோகர்ணம் எனவும், அங்கே கோயில் ஒன்று இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கையின் வரலாறு கூறுவதாக கொள்ளப்படும் மகாவம்சம் இயேசுவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வரலாறு கூறுகிறது
இக்கதைகள் பல ஆண்டுக்கணக்கில் வாய்வழியாகச் சொல்லப்பட்டு வந்த மரபுவழிக் கதைகள், கி.பி. 6ம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் தொகுத்து, எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையின் வரலாறானது ஒரு தலைப்பட்சமாக பெரும்பான்மையினரால் (சிங்களவர்களால்) மகாவம்சம், தீபவம்சம் ஆகியவற்றில் எழுதப்பட்டன. அதில் மகாவம்சத்தை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுகின்ற செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில் பல வரலாற்றுத் திரிபுகள், வரலாற்றுத் தவறுகள், வரலாற்றுக் கொச்சைப்படுத்தல்கள் அடங்கியுள்ளன.
கிபி 6 ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை ஒரு வரலாற்று நூலாகக் கொள்ள முடியுமானால், அந்த அளவுக்கு நமக்குக் கிடைக்கும் கர்ணபரம்பரைக் கதைகளில் காணப்படும் அடிப்படைத் தகவல்கள் ஒரே மாதிரியானதாக இருந்து, அவற்றிற்கு வேறு ஆதாரங்களும் இருப்பின் அவற்றையும் நாம் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்றே கருதமுடிகிறது. இலக்கியங்களும் கர்ணபரம்பரைக் கதைகளும் அப்படியே வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்ல. அவற்றினூடே வெளிப்படும் வரலாற்று உண்மைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. அடிப்படையான ஒரு வரலாறு இல்லாமல் இக்கதைகள் உருவாக்கப்படுவதில்லை. அவைகளை சுவையோடு கூறவும், கேட்பவர் திளைக்கவும் கற்பனை மெருகூட்டப்பட்டு கூறப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்களை எடுத்துக்கொள்ளலாம். பிறமொழி இலக்கியங்களான இலியட், ஒடிசி, ஜூலியஸ் சீசர், கிளியோபட்ரா போன்ற இலக்கியங்களும் வரலாறு கலந்த கற்பனை கதைகளே.
நாம் வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது ஈழநாட்டில் ஐந்து சிவாலயங்கள் இருந்தன என்பதும் அவை வரலாற்றுக்கு முற்பட்ட, அதாவது மகாவம்சத்தில் கூறும் விஜயன் வருகைக்கு முன்பே இருந்தன என்பதுவும் மறுக்க முடியாதவை.
ஈழத்தின் வடக்கே காங்கேசன்துறைக்கு அருகே உள்ள கீரிமலை “நகுலேச்சரம்”,
வடமேற்கே மன்னாருக்கு (மகாதித்தாவிற்கு) அண்மையிலுள்ள “திருக்கேதீச்சரம்”,
மேற்கே சிலாபத்தில் உள்ள “முன்னீச்சரம்”,
தென்கிழக்கில் மாந்தோட்டைக்கு அருகில் உள்ள “தண்டேச்சரம்”,
கிழக்கே பெரிய கொட்டியாரக் குடாவுக்கு (திருக்கோணமலை) எதிரே உள்ள “திருக்கோணேச்சரம்” என்பனவாம்.
அவை இன்றளவும் ஈழத்தின் ஐந்து ஈச்சரங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இவை தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களாக நீடிப்பதே நமது பண்பாட்டு, சமய, வரலாற்று ஆதாரமாக திகழ்கின்றன. இந்த வகையில் திருக்கோணமலை கோணேசர் கோவில் பற்றிய சில முக்கிய வரலாற்று தகவல்களையும் இங்கே எடுத்து நோக்குவோம்.
பண்டைய கோணேசர் ஆலயம் கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. நீரூழியினால் குமரிக்கண்டம் அழிவுற்றபோது, எஞ்சிய ஒரு நிலத்திணிவாக மீந்திருந்த ஈழத் தீவில் கோணேசர் கோயிலும் நிலை பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான சில கருத்துகள் வருமாறு,
வரலாற்றுக் காலத்துக்கு முன் உலகில் பல கடற்கோள்கள் ஏற்பட்டுள்ளன. ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு கடற்கோளும், 7ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மற்றொரு கடற்கோளும், 5000 ஆண்டுகளுக்கு முன் இறுதிக் கடற்கோளும் ஏற்பட்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதிலே 'வெசினர்' என்பவர் ஐந்து கடற்கோள்கள் ஏற்பட்டன என்றும் 'டெனன்ற்' என்பவர் மூன்று கடற்கோள்கள் ஏற்பட்டன என்றும் கூறுகின்றனர்.
டெனன்ற் இன் கூற்றுப்படி,
முதலாவது நீரூழி கி.மு 2378 ஆம் ஆண்டிலும்
இரண்டாவது நீரூழி கி.மு 504 ஆம் ஆண்டிலும்
மூன்றாவது நீரூழி கி.மு 306 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டன. இவற்றுள் முதலாவது நீரூழியில் ஈழம் தமிழகத்திலிருந்து பிரிந்தது என்றும் இரண்டாவது நீரூழியில் ஈழத்துக்கு அதிக அழிவு இல்லை என்றும் மூன்றாவது நீரூழியின் போது ஈழத்துக்கு பேரழிவு ஏற்பட்டது எனவும் கூறுகிறார். மூன்றாவது நீரூழியின் போதே கோணேசர் ஆலயமும் அழிந்திருக்க வேண்டும்.
Dr. W. பாலேந்திரா கூற்றுப்படி, இராவணனது காலம் கிமு 6000 ஆண்டு எனவும் கிமு 3544ல் நீரூழி ஏற்பட்டு அதில் கோணேசர் ஆலயம் உட்பட ஈழத்தின் பெரும்பகுதி அழிவுற்றது.
'ராஜாவலிய' எனும் பாளி மொழி வரலாற்று நூல், இராமாயண காலத்துக்குப் பின்னர் பெரும் கடல்கோள் ஏற்பட்டு இலங்கையின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதாகக் கூறுகிறது.
முதலியார் குல.சபாநாதன் அவர்கள் கி.மு. 3541 ஆம் ஆண்டு கோணேசர் கோயில் கட்டப்பட்டது என்கிறார். கோணேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மையானது எனவும், திருகோணமலை நாகரிகமும் மொகஞ்சதாரோ நாகரிகமும் ஏறக்குறைய ஒரே காலத்தவை எனக் கூறுகிறார். இராவணன் வெட்டு என்று அழைக்கப்படும் மலைப் பிளவும் தற்போது மலைப்பூசை நடைபெறும் பாறையின் பிளவுகளும் 'கடற்கோளினால் மலைகள் பிளவுபடும்' தன்மையில் அமைந்துள்ளன. இப்பாறையின் எதிர்ப்புறம் உள்ள பாறைக்கு அடியில் ஆதி கோணேசர் கோயில் மூலட்டானம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப் பாறைகளுக்கு இடையில் கடல் பரந்து இருக்கும் இடமே ஆதிக்கோயில் இருந்த இடம் என்பது ஆய்வாளர் கருத்து.
கோயிலுக்கு வடகிழக்கே பாவநாசத் தீர்த்தக் கேணி அமைந்திருந்தது. இக்கேணி நீள்சதுர வடிவில் கருங்கற்களால் ஆன படித்துறைகளை கொண்டிருந்தது.
கடல் மட்டத்திற்குக் கீழ் வரை ஆழம் கொண்டிருந்தமையால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தினர். மூலவர் தீர்த்தமாட வேறொரு பாவநாசக் கிணறும் அமைக்கப் பட்டிருந்தது. கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகிறது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதனால் இதனை முதன்மை மண்டபம் என்றழைப்பர்.
போர்த்துக்கேயர் கோயிலை அழித்தபொழுது தீர்த்தக்கேணி மட்டுமே தப்பித்தது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்தோற்சவக் காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது நடைபெறுகின்றது.
பன்னெடுங்காலமாகவே இயற்கைச் சீற்றத்