கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட இடம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதா? தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதா? என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சதி இருக்கிறது என்றும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை, பொதுக் கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், தீர்ப்பு வரும் வரை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கே.கே.ரமேஷ், கதிரேசன், தங்கம் உள்ளிட்டோர் 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த பொதுநல வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், "கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரும் இந்த வழக்கில் எந்த சட்டவிரோத செயலையும் குறிப்பிடவில்லை. ஆதரமின்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை தேவையில்லை” என வாதிட்டார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், “காவல் துறையின் தவறான நடவடிக்கையால் இந்த சம்பவம் நடந்துள்ளது” என தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீதிபதிகள், “கூட்டம் நடைபெற்ற இடம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ளதா? அல்லது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளதா? அந்த இடத்தில் எப்படி அனுமதி அளித்தீர்கள்?
பிரச்சாரம் நடைபெற்ற இடம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது என்றால் அங்கு பரப்புரைக்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே?, அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த குடிநீர், சுகாதார வசதிகள், சட்டம் -ஒழுங்கை காவலர்கள் கண்காணித்தார்களா?” என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதி பெற்றுதான் தவெகவினர் கூட்டம் நடத்தினார்கள்" என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "பொதுக்கூட்டம் அல்லது எந்த கூட்டமானாலும் தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே நடத்தப்படக்கூடாது," என்று தெரிவித்தனர்.
அத்துடன், "இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்கவோ, சிபிஐ விசாரணைக்கு அனுமதித்தோ உத்தரவிட முடியாது" எனவும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், "ஜி.எஸ். மணி, கே.கே.ரமேஷ், எம்.எல் ரவி ஆகியோர் இந்த விவகாரம் குறித்த சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்த நீீதிபதிகள், சிபிஐ விசாரணை, இழப்பீட்டு் தொகை அதிகரிப்ப, உடற்கூராய்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
பரப்புரைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில், "குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது. பரப்புரைகள் தொடர்பாக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்த நீதிபதிகள் இதுதொடர்பான 3 வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.


